/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வெளி மாவட்டங்களில் ஆய்வு செய்ய அலுவலர்கள் பயணம்
/
வெளி மாவட்டங்களில் ஆய்வு செய்ய அலுவலர்கள் பயணம்
ADDED : ஜூலை 16, 2025 09:42 PM
அன்னுார்; கோவை மாவட்டத்திலிருந்து, ஊரக வளர்ச்சி துறையினர் 40 பேர் மூன்று நாள் பட்டறிவு பயணமாக தென்காசி சென்றனர்.
ஊரக வளர்ச்சித்துறை சார்பில், பிற மாவட்டங்களில் செயல்படும் திட்டங்கள் குறித்து தெரிந்து கொள்ள, கோவை மாவட்டத்தில் இருந்து துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் ஊராட்சி செயலர்கள், 40 பேரை தென்காசி, சிவகங்கை, தேனி ஆகிய மூன்று மாவட்டங்களுக்கு, மூன்று நாட்கள் செல்ல அறிவுறுத்தப்பட்டது.
கோவை மாவட்டத்தில் உள்ள 12 ஊராட்சி ஒன்றியங்களில் இருந்து, 40 பேர் கோவை கலெக்டர் அலுவலகத்தில் இருந்து சிறப்பு பஸ் வாயிலாக நேற்று முன்தினம் இரவு தென்காசிக்கு புறப்பட்டு சென்றனர். 16, 17, 18, ஆகிய மூன்று நாட்கள் பட்டறிவு பயணம் நடைபெறுகிறது.
அந்த மாவட்டங்களில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது என்பதை பார்வையிடுகின்றனர்.
இதில் அன்னுார், சர்க்கார் சாமக்குளம், சுல்தான் பேட்டை, சூலூர், பெரியநாயக்கன் பாளையம், காரமடை உள்பட 12 ஒன்றியங்களில் இருந்து 40 பேர் பட்டறிவு பயணத்திற்கு புறப்பட்டு சென்றனர்.