/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அம்மாடி... டாஸ்மாக்கில் ரூ.1,000 கோடி ஊழலா! கொதிக்கிறார்கள் கோவை மக்கள்
/
அம்மாடி... டாஸ்மாக்கில் ரூ.1,000 கோடி ஊழலா! கொதிக்கிறார்கள் கோவை மக்கள்
அம்மாடி... டாஸ்மாக்கில் ரூ.1,000 கோடி ஊழலா! கொதிக்கிறார்கள் கோவை மக்கள்
அம்மாடி... டாஸ்மாக்கில் ரூ.1,000 கோடி ஊழலா! கொதிக்கிறார்கள் கோவை மக்கள்
ADDED : மார் 18, 2025 06:08 AM

தமிழகத்தில் 'டாஸ்மாக்' நிறுவனம் மது கொள்முதல் செய்யும் ஆலைகள், மது விற்பனை நிறுவனங்கள், டாஸ்மாக் தலைமை அலுவலகம் என, 25க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள், சமீபத்தில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது, ரூ.1,000 கோடிக்கு மேல் முறைகேடு நடந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக, அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. இது, எதிர்கட்சியினர், பொது மக்கள் மத்தியில் கடும் கோபத்தையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக, கோவை மக்கள் சிலரிடம் பேசினோம்...
'இருக்கவே கூடாது!'
ரூ.1000 கோடி முறைகேடு நடந்துள்ளதை அமலாக்கத்துறை வெளிக்கொண்டுவந்துள்ளது வரவேற்கத்தக்கது. வழக்கை துரிதப்படுத்தி குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத்தர வேண்டும். குடித்துவிட்டு குற்றங்களில் ஈடுபடும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. தமிழகத்தில் 'டாஸ்மாக்' மதுக்கடைகளை முழுவதும் மூடினால் மட்டுமே, மக்களுக்கு நல்லது நடக்கும்.
- ரமேஷ் இன்சூரன்ஸ் ஏஜென்ட்
'மதுக்கடைகளை மூடணும்'
எனக்கு தெரிந்த ஒருவருக்கு, மது குடிக்கும் பழக்கமுண்டு. ரூ.80 ஆயிரம் கடன் அடைக்க முடியாமல் சிரமத்தில் இருந்தார். வேலைக்கு சென்று, 100 நாள் மது அருந்தாமல் பணத்தை சேமித்து, கடனை கட்டி முடித்து விட்டார். ஒவ்வொரு 'குடி'மகனும் வாங்கும் சம்பளத்தை தண்ணீராக செலவழிக்கின்றனர். இந்த பணம்தான் முறைகேடாக மாறுகிறது. எனவே, கடைகளை மூடினால் நாட்டுக்கும், வீட்டுக்கும் நல்லது.
- கண்ணன் மலுமிச்சம்பட்டி.
'கள்ளச்சந்தையில் மது'
இரவு, 10:00 மணிக்கு மேல் கள்ளச்சந்தையில் மது விற்பனை செய்வது அப்பட்டமாக தெரிந்தும் யாரும் நடவடிக்கை எடுப்பதில்லை. மாமூல் வாங்கிக்கொண்டு கண்டுகொள்ளாமல் இருக்கின்றனர். இப்படியிருக்க முறைகேடு நடக்காமல் இருக்குமா. ரூ.1,000 கோடி என்பது குறைவானது. அதற்கு மேலும் நடந்திருக்கும். அமலாக்கத்துறை தமிழகம் முழுவதும் உள்ள மதுக்கடைகளில் சோதனை செய்ய வேண்டும்.
- கணேஷ்குமார் நஞ்சப்பா ரோடு.
'பில்' தருவதில்லை'
கேரள மாநிலத்தில் கள், மது என இரண்டுமே விற்கின்றனர். மதுக்கடையில் முறையாக 'பில்' கொடுக்கின்றனர். மதுவும் தரமாக இருக்கும். தமிழகத்தில் 'பில்' தருவதில்லை. பாட்டிலுக்கு ரூ.10 கூடுதலாக வசூலிக்கின்றனர். இதில், கடை ஊழியர்கள் எடுத்தது போக, உயர் அதிகாரிகளுக்கும் பங்கு இருக்கும். இதுவும் முறைகேடுதான். துறை அமைச்சர், அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- ராஜூ பாலக்காடு.
'காட்சி மாறவில்லை'
ஆட்சி மாறியும் காட்சி மாறவில்லை என்பதுதான் உண்மை. தேர்தல் சமயத்தில் பூரண மது விலக்கு அமல்படுத்தப்படும் என, உறுதிமொழி கொடுக்கும் அரசியல்வாதிகள், ஆட்சிக்கு வந்ததும் வருவாயை பார்த்து வாக்குறுதியை மறந்துவிடுகின்றனர். தற்போதைய ஆளுங்கட்சியும் இதில் விலக்கில்லை. டாஸ்மாக்கில் ரூ.1,000 கோடி என்பது, சிறு தொகை அல்ல. குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்.
- திருநாவுக்கரசு சித்தாபுதுார்.
'கள்' வேண்டும்'
தமிழகத்தில் மதுக்கடைகளுக்குமூடுவிழா கண்டு, கள் கொண்டுவர வேண்டும். கள் விற்பனைக்கு வந்தால், தென்னை விவசாயம் மேலோங்கும். கள் உடலுக்கு எந்த பாதிப்பையும் தராது. செலவும் குறைவு. இதனால், விவசாயம், உடல் நலம் சார்ந்த விஷயங்களில் நன்மையே கிடைக்கிறது. கேரளா போன்ற அண்டை மாநிலங்களை பார்த்து தெரிந்து கொள்ள வேண்டும்.
- பாலாஜி ஸ்டேஷனரி கடை உரிமையாளர்.