ADDED : ஜன 19, 2025 11:30 PM

வால்பாறை : கோவை மாவட்டம், வால்பாறை லோயர்பாரளை எஸ்டேட் பகுதியைச் சேர்ந்தவர் சரோஜினி, 72; ஓய்வு பெற்ற எஸ்டேட் தொழிலாளி.
கோவையில், தன் மகன் வீட்டில் வசித்த இவர், மாதந்தோறும் ஓய்வூதியம் பெற, லோயர்பாரளை எஸ்டேட் வருவது வழக்கம்.
நான்கு நாட்களுக்கு முன், பொங்கல் பண்டிகைக்காக வந்த இவர், வீட்டில் தனியாக இருந்துள்ளார். நேற்று முன்தினம் பூட்டிய வீட்டில் முனகல் சத்தம் கேட்டதாக பக்கத்து வீட்டில் வசிப்பவர் போலீசுக்கு தெரிவித்தார்.
வால்பாறை போலீசார் பார்த்த போது, உடலில் பல இடங்களில் காயங்களுடன், மூதாட்டி ரத்த வெள்ளத்தில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். கோவை ரூரல் எஸ்.பி., கார்த்திகேயன் உத்தரவில், மோப்ப நாய் கொண்டு வரப்பட்டது.
அதே எஸ்டேட்டைச் சேர்ந்த ரங்கராஜன், 27, என்ற வாலிபர் வீடு முன், மோப்பநாய் நின்றது. அவரிடம் சந்தேகத்தில் போலீசார் விசாரிக்கின்றனர்.