/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கவனம் ஈர்த்த 'ஓம் காளி ஜெய் காளி!' இயக்குனர் ராமு செல்லப்பாவின் புதிய பாதை
/
கவனம் ஈர்த்த 'ஓம் காளி ஜெய் காளி!' இயக்குனர் ராமு செல்லப்பாவின் புதிய பாதை
கவனம் ஈர்த்த 'ஓம் காளி ஜெய் காளி!' இயக்குனர் ராமு செல்லப்பாவின் புதிய பாதை
கவனம் ஈர்த்த 'ஓம் காளி ஜெய் காளி!' இயக்குனர் ராமு செல்லப்பாவின் புதிய பாதை
ADDED : ஏப் 04, 2025 11:55 PM

'எங்கிட்ட மோதாதே' திரைப்படத்தில் கவனம் ஈர்த்தவர், இயக்குனர் ராமு செல்லப்பா. நீண்ட நாட்களுக்கு பின், இவர் ஒரு நாவல் எழுதி, அதை ஜியோ ஹாட் ஸ்டாருக்காக, வெப் சீரிஸாக கொண்டு வந்துள்ளார். அது தான் பெரும் வரவேற்பை பெற்றுள்ள, 'ஓம் காளி ஜெய் காளி'.
கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் என வியக்க வைத்திருக்கிறார். திரைக்கதையில், நடிகர் குமரவேல் இவருக்கு உதவியுள்ளார்.
நடிகர் விமல், புகழ், கஞ்சா கருப்பு, மகேஸ்வரி, பாவனி, குயின்ஸி ஸ்டான்லி, இந்தி நடிகை சீமா பிஸ்வாஸ் உட்பட பலர் நடித்துள்ளனர்.
இத்தொடரின் கதைக்களம், திரைக்கதை மற்றும் சண்டை காட்சிகள், அதிரடி மற்றும் திரில்லர் விரும்பி பார்ப்பவர்களுக்கு, புது அனுபவத்தை கொடுத்துள்ளது.
இயக்குனர் ராமு செல்லப்பாவிடம் பேசினோம்.
எந்த மாதிரியான கதைக்களம் இது?
திருவிழா பின்னணியில் நடக்கக் கூடிய, பழி வாங்கும் கதை. துாத்துக்குடி மாவட்டம் குலசேகரப் பட்டணத்தில் நடக்கிறது. தசரா குறித்த முழு விபரங்களும் இதில் கொடுத்திருக்கிறோம். தசராவுக்கு எப்படி மாலை அணிவர், எப்படி விரதம் இருப்பர், என்ன மாதிரியாக சடங்குகள் இருக்கிறது, எப்படி வேடம் கட்டுகிறார்கள், எப்படியெல்லாம் வேண்டுதல் வைக்கிறார்கள் என, தசரா விழா குறித்த அனைத்தும் இதில் அடங்கியிருக்கிறது.
இதை வெப் சீரிஸாகத்தான் எடுக்க வேண்டுமா?
நிறைய கதாபாத்திரங்கள் இருப்பதால், அதை வெப் சீரிஸாக தான் எடுக்க முடியும். இதை, திரைப்படம் என்கிற மனநிலையில் யோசிக்கவில்லை. ஒரு சீசன் ரிலீஸாகி இருக்கிறது. அடுத்த சீசன் ரிலீஸாக உள்ளது. பார்த்தவர்களுக்கு இது பிடித்து விட்டது. இதில் நடித்தவர்களும், சிறப்பான பங்களிப்பை வழங்கி வெற்றிக்கு உதவினர்.
வெப் சீரிஸ் பார்க்க மக்களிடையே ஆர்வம் இருக்கிறதா?
இது ஒரு கற்பனைக் கதை தான். கொரோனா காலத்தில் ஓய்வு கிடைத்த வேளையில், இந்த நாவலை எழுத முடிந்தது. கொரோனாவுக்கு பின், வெப் சீரிஸ் பணிக்கான வாய்ப்பு கிடைத்தது. குலசேகரப்பட்டணத்தில் இரண்டு வருடங்களாக சூட்டிங் நடத்தினோம். வெப் சீரிஸ் பார்ப்பதற்கான ஆர்வம், பொதுமக்கள் மத்தியில், நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
திரைப்படம் போல் வெப் சீரிஸ் இருக்க வேண்டும் என்று பலர் நினைக்கிறார்களே?
கொரோனா காலத்தில், பொதுமக்கள் பலர், வெப் சீரிஸ் பார்க்க துவங்கி விட்டனர். ஆனால், வேகமாக செல்ல வேண்டும் என்று நினைக்கின்றனர். அப்படி கிடையாது. நிதானமாக பார்க்கக் கூடியது. 'ஓம் காளி ஜெய் காளி' வெப் சீரிஸை, இளைஞர்களும், குடும்பத்தில் இருப்பவர்களும் அதிகமாக பார்க்க துவங்கி விட்டனர்.
அடுத்ததாக திரைப்படம் இயக்குவீர்களா; மறுபடியும் வெப் சீரிஸ் தானா?
திரைப்படம், வெப் சீரிஸ் என இரண்டும் இயக்க இருக்கிறேன். திரைப்படம் இயக்குவது பேச்சுவார்த்தையில் உள்ளது. பொதுமக்கள் விரும்பும் வகையில், வித்தியாசமான களம் இருக்க வேண்டும் என்று எண்ணுகிறேன்.

