/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
உடுமலை ரோட்டில் 4 ஊராட்சிகளின் மக்கள் மறியல் ;ரோட்டில் அமைத்த தடுப்பு உடனடியாக அகற்றம்
/
உடுமலை ரோட்டில் 4 ஊராட்சிகளின் மக்கள் மறியல் ;ரோட்டில் அமைத்த தடுப்பு உடனடியாக அகற்றம்
உடுமலை ரோட்டில் 4 ஊராட்சிகளின் மக்கள் மறியல் ;ரோட்டில் அமைத்த தடுப்பு உடனடியாக அகற்றம்
உடுமலை ரோட்டில் 4 ஊராட்சிகளின் மக்கள் மறியல் ;ரோட்டில் அமைத்த தடுப்பு உடனடியாக அகற்றம்
ADDED : ஜன 09, 2024 12:11 AM
பொள்ளாச்சி;பொள்ளாச்சி - உடுமலை ரோட்டில், மகாலிங்கம் பொறியியல் கல்லுாரி அருகே இருந்த வழித்தடத்தை அடைத்து தடுப்பு அமைத்தது உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை கண்டித்து மக்கள் மறியலில் ஈடுபட்டனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
பொள்ளாச்சி - உடுமலை ரோடு விரிவாக்கம் செய்யப்பட்டாலும் விபத்துகள் குறையவில்லை. சென்டர் மீடியனில் உள்ள கம்பிகளை அகற்ற வேண்டும், சர்வீஸ் ரோடு குறுகலாக உள்ளது; சென்டர் மீடியனில் புதர்கள் அதிகளவு வளர்ந்துள்ளது என அடுக்கடுக்காக பிரச்னைகள் இந்த ரோட்டில் இருந்தாலும், அதற்கு தீர்வு காணப்படாமல் உள்ளது.
இந்நிலையில், 'விபத்துகளை தடுப்பதற்காக' எனக்கூறி, மகாலிங்கம் பொறியியல் கல்லுாரி அருகே வாகனங்கள் திரும்பிச் செல்லும் வழித்தடத்தை அடைத்து தடுப்புகள் அமைக்கப்பட்டன. தகவல் அறிந்த சின்னாம்பாளையம், மாக்கினாம்பட்டி, ஊஞ்சவேலாம்பட்டி மற்றும் சோலபாளையம் ஊராட்சி தலைவர்கள், கிராம மக்கள் அப்பகுதியில் நேற்று காலையில் மறியல் போராட்டத்துக்கு திரண்டனர். அங்கு வந்த போலீசார், மக்களிடம் பேச்சு நடத்தினர்.
மக்கள் கூறுகையில், 'மகாலிங்கம் பொறியியல் கல்லுாரி அருகே இருந்த வழித்தடத்தை தான் பயன்படுத்தி வருகிறோம். தற்போது, இந்த வழித்தடமும் அடைக்கப்பட்டால், ஊஞ்சவேலாம்பட்டி அருகே சென்று சுற்றி வர வேண்டிய நிலை உள்ளது. இதனால், வீண் அலைச்சல் உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்படுகின்றன. இங்குள்ள தடுப்புகளை அகற்ற வேண்டும்,' என்றனர்.
பேச்சு நடத்திய போலீசார், 'அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக' உறுதியளித்தனர். ஒரு மணி நேரம் காத்திருந்த ஊராட்சி தலைவர்கள், மக்கள், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வராததை கண்டித்து திடீரென மறியலில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து, போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்; தடுப்புகள் அகற்றப்படும் என உறுதியளித்ததை அடுத்து மக்கள் மறியலை கைவிட்டனர். இதனால், ரோட்டில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தொடர்ந்து, கிரேன் உதவியுடன் தடுப்புகள் அகற்றப்பட்டு, ரோட்டின் ஓரத்தில் வைக்கப்பட்டன.
பொதுமக்கள் கூறியதாவது:
பொள்ளாச்சி - உடுமலை ரோட்டில், சென்டர் மீடியனில் இரவு நேரங்களில் மின்விளக்கு வசதி இல்லாததால் விபத்து ஏற்படுகிறது. இதை தவிர்க்க மின்விளக்கு பொருத்த வேண்டும். ரோட்டின் இருபுறமும் நிழற்கூரை அமைத்து, அங்கு பஸ் நிறுத்தி பயணிகளை ஏற்றி இறக்க பக்கவாட்டு தடுப்பை அகற்ற வேண்டும்.
ரோட்டின் இருபுறமும் ஏராளமான குடியிருப்புகளில், ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வசிக்கின்னர். மேலும், பள்ளி, கல்லுாரிகள் அடுத்தடுத்து உள்ளதால் ரோட்டை கடந்து செல்ல மிகுந்த சிரமமும், விபத்துகளும் ஏற்படுகின்றன.
எனவே, மரப்பேட்டை முதல் ஊஞ்சவேலாம்பட்டி வரை பொருத்தமான மூன்று இடத்தை தேர்வு செய்து, அந்த இடத்தில் சாலை விதிகளுக்கு உட்பட்டு ரவுண்டானா அமைத்து வாகன ஓட்டுனர்களும், பயணியரும் பாதுகாப்பாக சென்று வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், ரோட்டின் இருபுறம் உள்ள ஆக்கிரமிப்புகள், பக்கவாட்டு தடுப்புகளை அகற்றி அகலப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கோரிக்கையை ஏற்று, கல்லுாரி அருகே அமைக்கப்பட்ட தடுப்புகள் மட்டும் அகற்றப்பட்டன. தொடர்ந்து நீண்ட கால கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்.
இவ்வாறு, கூறினர்.
உடுமலை, ஜன 9-
திருப்பூர் மாவட்ட அளவிலான, விரைவு ஓட்ட போட்டிகள், உடுமலை அரசு கலைக் கல்லுாரி மைதானத்தில் நடந்தது.
திருப்பூர் தடகள சங்கத்தலைவர் சண்முகசுந்தரம் தலைமை வகித்தார். உடுமலை அரசு கலைக்கல்லுாரி உடற்கல்வி இயக்குனர் மனோகர் செந்துார்பாண்டி முன்னிலை வகித்தார். முன்னதாக, சங்க இணைச்செயலாளர் ராமகிருஷ்ணன் வரவேற்றார்.
தொடர்ந்து, 6, 8, 10, 12, 14, 16, 18, 20 வயதுக்கு உட்பட்டவர்கள் மற்றும் மூத்தோர் என, பல்வேறு பிரிவுகளில் போட்டி நடத்தப்பட்டது. தவிர, மாணவ, மாணவியர் இடையே டென்னிஸ் பந்து எறிதல், 30 மீ., 40 மீ., 50 மீ., 60 மீ., 75 மீ., 100 மீ., 200 மீ., 400 மீ., உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டது. தொடர்ந்து, பரிசளிப்பு விழா நடந்தது.
ராயல் ஸ்போர்ட்ஸ் கிளப் இயக்குனர் ரமேஷ்குமார், மடத்துக்குளம் இன்ஸ்பெக்டர் பாலமுருகன், முன்னாள் மாநில வாலிபால் வீரர் சீனிவாசன், முன்னாள் மாநில ஹாக்கி வீரர் சண்முகராஜ் ஆகியோர், முதல் மூன்று இடங்களில் வென்றவர்களுக்கு, பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கினர்.சங்கச்செயலாளர் முத்துக்குமார், திருப்பூர் மாவட்ட மூத்தோர் தடகள சங்க செயலாளர் சுப்பிரமணியம், சங்க தொழில்நுட்பக் குழு உறுப்பினர் சிவசக்தி ஆகியோர் உட்பட பலர் பங்கேற்றனர்.