/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஓணம் பண்டிகை கொண்டாட்டம்; பூக்கோலம் வரைந்து மகிழ்ந்த மக்கள்
/
ஓணம் பண்டிகை கொண்டாட்டம்; பூக்கோலம் வரைந்து மகிழ்ந்த மக்கள்
ஓணம் பண்டிகை கொண்டாட்டம்; பூக்கோலம் வரைந்து மகிழ்ந்த மக்கள்
ஓணம் பண்டிகை கொண்டாட்டம்; பூக்கோலம் வரைந்து மகிழ்ந்த மக்கள்
ADDED : செப் 05, 2025 10:38 PM

கோவை; கோவையில் வசிக்கும் மலையாள மக்கள் பாரம்பரிய கலாச்சார பின்னணியோடு நேற்று ஓணம் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அதிகாலையிலேயே வீடுகளுக்கு முன் பல வண்ண மலர்களால் அத்தப்பூக்கோலம் வரைந்து மகாபலி மன்னனை வரவேற்றனர்.
குடும்பத்தார் அனைவரும் புத்தாடை அணிந்து பாரம்பரிய முறைப்படி வீடுகளில் சிவபெருமான், குருவாயூரப்பன், நாராயணிதேவியை பலவித மலர்களால் பூஜித்து வழிபட்டனர். மதியம் ஓணம் பண்டிகையின் முத்தாய்ப்பான ஓண சத்தியா விருந்து படைத்து உறவினர் மற்றும் நண்பர்களுடன் விருந்துண்டு மகிழ்ந்தனர்.
தொடர் விடுமுறையாக இருந்ததால், நேற்று நீர்நிலைகள் நிறைந்திருக்கும் பகுதிகளுக்கும், ஷாப்பிங் மால்களுக்கும், வாட்டர் தீம் பார்க்குகளுக்கும், பூங்காக்களுக்கும் குடும்பத்தார் அனைவரும் சென்று குதுாகலித்தனர்.
சித்தாபுதுார் ஐயப்பன் கோயிலில், சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நேற்று காலை 5 மணிக்கு நடந்தது. நிர்மால்ய பூஜை, சீவேலி, பந்திரடி மற்றும் உஷபூஜை நடந்தது. கருவறையில் சுதர்சன சக்கரத்தின் மீது வீற்றிருந்து அருள்பாலிக்கும் ஐயப்ப சுவாமிக்கு சம்பங்கி, செவ்வந்தி, துளசியால் அலங்கரிக்கப்பட்டு சுற்றிலும் நெய் தீபங்களால் விளக்கு ஏற்றப்பட்டிருந்தது.
விளக்கொளியில் ஐயப்பசுவாமி ஜொலித்தார். பட்டாடை அணிவிக்கப்பட்டு சுவாமி ஓணம் திருநாளில் பக்தர்களுக்கு அருள் காட்சியருளினார்.
தங்கக்கொடி மரத்தருகே துளசி மற்றும் மருகு, ரோஜா, செவ்வந்தி, மல்லி, செண்டுமல்லி மலர்களால் அத்தப்பூக்கோலம் ஒன்பது வரிசைகளில் போடப்பட்டிருந்தது. ஓணம் பண்டிகையையொட்டி, கோவில் சார்பில் ஓணசத்யா விருந்து பரிமாறப்பட்டது.