ADDED : செப் 05, 2025 09:57 PM

பொள்ளாச்சி,; பொள்ளாச்சி பகுதியில் வாழும் கேரள மக்கள், ஓணம் பண்டிகைக்கு அத்தப்பூ கோலமிட்டு, நண்பர்கள், உறவினர்களுக்கு அடப்பிரதம் பாயாசம் பரிமாறி கோலாகலமாக கொண்டாடினர்.
பொள்ளாச்சி வாழ் கேரளா மக்கள், ஆண்டுதோறும் ஓணம் பண்டிகையை விமரிசையாக கொண்டாடுகின்றனர். இந்தாண்டும், ஓணம் பண்டிகையை கொண்டாட கேரளா மக்கள், மார்க்கெட்டில் பூக்கள் மற்றும் பொருட்களை நேற்றுமுன்தினம் வாங்கிச்சென்றனர்.
ஓணம் பண்டிகையையொட்டி பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டதால், பொள்ளாச்சியில் வாழும் கேரளா மக்கள் பலரும் குடும்பத்துடன் கேரளாவிற்கு சென்றனர்.
பொள்ளாச்சியில் கேரளா மக்கள் வசிக்கும் பகுதிகளில், அத்தப்பூ கோலமிட்டு, புத்தாடை அணிந்து பண்டிகையை கொண்டாடினர். அடப்பிரதம் பாயாசம் தயாரித்து, உறவினர்கள், நண்பர்களுக்கு பரிமாறி கோலாகலமாக கொண்டாடினர்.
ஓணம் சிறப்பு வழிபாட்டில் வீடுகளில், மாவேலி சிலை வடிவமைத்து, மலர்களால் அலங்காரம் செய்து, படையல் வைத்தும் வழிபட்டனர்.
ஆனைமலை ஸ்ரீதேவி, பூதேவி சமேத ரங்கநாத பெருமாள் கோவிலில், ஓணம் பண்டிகையையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.