ADDED : செப் 21, 2026 08:04 PM
உடுமலை: வாகனப் பதிவு அல்லது ஓட்டுநர் தேர்வு முடிந்த நாளிலேயே, சம்பந்தப்பட்டவர்கள் தங்கள் லைசன்ஸ் மற்றும் ஆர்.சி. புத்தகத்தை இணையதளம் வாயிலாக, பதிவிறக்கம் செய்து கொள்ளும் புதிய நடைமுறை, 15-ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது.
இதுவரை லைசன்ஸ் மற்றும் ஆர்.சி. புத்தகம் தபாலில் அனுப்பப்பட்டு வந்தது. தற்போது அந்த நடைமுறை நிறுத்தப்பட்டு, சான்றிதழ்கள் டிஜிட்டல் முறையில் வழங்கப்படுகின்றன. புதிய டிஜிட்டல் சான்றிதழ்களில் ‘க்யூஆர்’ குறியீடு இடம்பெறும்.
இதனால், அரசின் தரவுத்தளத்தில் உள்ள அசல் ஆவணத்தை உடனடியாக சரிபார்க்க முடியும். இதனால் போலி மற்றும் நகல் ஆவணங்களின் பயன்பாட்டையும் தடுக்க முடியும்.
லைசன்ஸ் மற்றும் ஆர்.சி. புத்தகத்தை, முதல் ஒரு ஆண்டு இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அதன்பின், பதிவிறக்கக் கட்டணம் அறிமுகப்படுத்தப்படும்.
இந்த வசதியை ‘எம்-பரிவாகன்’, ‘டிஜிலாக்கர்’ போன்ற அரசு அங்கீகரித்த அதிகாரப்பூர்வ தளங்களில் மட்டுமே பயன்படுத்த வேண்டும். பதிவிறக்கம் செய்த டிஜிட்டல் சான்றிதழை தேவையான நேரங்களில் அச்சிட்டு பயன்படுத்திக் கொள்ளலாம்.
அச்சு வடிவில் சான்றிதழ் தேவைப்படுபவர்கள், அரசு அங்கீகரித்த இ-–சேவை மையத்தில் பெற்றுக் கொள்ளலாம் என வட்டார போக்குவரத்துத்துறை அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.
