/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஒரு மதிப்பெண் வினாக்களில் 'டிவிஸ்ட்' அதிகம் கணக்குப்பதிவியல், வேதியியல் தேர்வு சற்று கடினம்
/
ஒரு மதிப்பெண் வினாக்களில் 'டிவிஸ்ட்' அதிகம் கணக்குப்பதிவியல், வேதியியல் தேர்வு சற்று கடினம்
ஒரு மதிப்பெண் வினாக்களில் 'டிவிஸ்ட்' அதிகம் கணக்குப்பதிவியல், வேதியியல் தேர்வு சற்று கடினம்
ஒரு மதிப்பெண் வினாக்களில் 'டிவிஸ்ட்' அதிகம் கணக்குப்பதிவியல், வேதியியல் தேர்வு சற்று கடினம்
ADDED : மார் 11, 2024 08:54 PM

-- நிருபர் குழு -
பிளஸ் 2 மாணவர்களுக்கான கணக்குப்பதிவியல் தேர்வில், ஒரு மதிப்பெண் வினாக்கள் 'டிவிஸ்ட்' செய்து கேட்கப்பட்டிருந்ததாக மாணவர்கள் தெரிவித்தனர்.
பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில், மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கான பொதுத்தேர்வு, 37 மையங்களில் நடக்கிறது. நேற்று, கணக்குப்பதிவியல், வேதியியல் மற்றும் புவியியல் தேர்வு நடந்தது. அதில், கணக்குப்பதிவியல் தேர்வை, 1,357 மாணவர்கள், 1,566 மாணவியர் என, 2,923 பேர் தேர்வு எழுதினர். 58 மாணவர்கள், 46 மாணவியர் என, 104 பேர் 'ஆப்சென்ட்' ஆகி இருந்தனர்.
இதேபோல, வேதியியல் தேர்வை, 1,690 மாணவர்கள், 2,170 மாணவியர் என, 3,860 பேர் எழுதினர். 25 மாணவர்கள், 128 மாணவியர் என, 153 பேர் தேர்வு எழுதவில்லை. புவியியல் தேர்வை, 56மாணவர்கள், 85மாணவியர் என, 141 பேர் எழுதினர். 4 மாணவர்கள், ஒரு மாணவியர் என, 5 பேர் 'ஆப்சென்ட்' ஆகி இருந்தனர்.
தேர்வு குறித்து மாணவர்கள் கூறியதாவது:
முத்துசாமிகவுண்டர்மெட்ரிக் பள்ளி மாணவி பூஜாஸ்ரீ: கணக்குப்பதிவியல் தேர்வில், மூன்று மதிப்பெண் கட்டாய வினாக்கள் கடினமாக இருந்தது. ஒரு மதிப்பெண் வினா 'டிவிஸ்ட்' செய்து கேட்கப்பட்டிருந்தது. பிற வினாக்கள் அனைத்தும் எளிமையாக இருந்ததால், தேர்வை விரைந்து எழுதினேன். முடிந்தவரை அனைத்து வினாக்களுக்கும் பதில் எழுதியுள்ளேன். அதிக மதிப்பெண் கிடைக்கும்.
யசோதா: கணக்குப்பதிவியலில், ஒரு மதிப்பெண் வினாக்களில் 3க்கும் மேற்பட்ட வினாக்கள் பாடத்தின் உள்பகுதியில் இருந்து கேட்கப்பட்டிருந்தது. தேர்வுக்கு முன் தீவிர பயிற்சியில் ஈடுபட்டிருந்ததால் பிற வினாக்கள் மிகவும் எளிமையாக இருந்து. விடைகளை விரைந்து எழுதினேன். தேர்வில் அதிக மதிப்பெண் கிடைக்கும்.
பரத்வித்யாநிகேதன் மெட்ரிக் பள்ளி மாணவி நித்தியதர்ஷினி: வேதியியல் தேர்வில் அதிகளவில் உட்பகுதியில் இருந்து ஒரு மதிப்பெண் வினாக்கள் கேட்கப்பட்டிருந்தது. மற்றபடி அனைத்து பிரிவுகளிலும் கேட்கப்பட்டிருந்த வினாக்கள், போதிய பயிற்சி வினாக்கள் வாயிலாக அறிந்திருந்ததால், எளிதாக பதில் எழுத முடிந்தது. தேர்வில், அதிக மதிப்பெண்கள் பெறுவேன்.
சுனிதா: வேதியியல் தேர்வுக்கு முன் பயிற்சி வினாக்கள் வாயிலாக, தீவிர பயிற்சி பெற்றிருந்தேன். இதனால், இந்த தேர்வை எளிமையாக எதிர்கொள்ள முடிந்தது. உட்பகுதியில் இருந்து ஒரு மதிப்பெண் வினாக்கள் கேட்கப்பட்டிருந்தாலும் தேர்வை எளிதாகவே எழுதியுள்ளேன்.
சுருதி: வேதியியல் தேர்வில், அதிக அளவிலான ஒரு மதிப்பெண் பகுதிகள் அகநிலை வினாக்களாகவே அமைந்திருந்தன. கட்டாய வினா பகுதியும் சற்று கடினமாகவே இருந்தது. ஆசிரியர்கள் வழிகாட்டுதலில் போதிய பயிற்சி பெற்றிருந்ததால், கடினமான வினாக்களுக்கும் நல்லமுறையில் தேர்வை எழுதினேன். அதிக மதிப்பெண்கள் கிடைக்கும்.
உடுமலை
உடுமலை எஸ்.கே.பி. அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் கூறியதாவது:
விஷ்ணுப்ரியா: கணக்குப்பதிவியல் பாடம் எளிமையாகவே இருந்தது. தேர்ச்சி பெறுவது அனைத்து மாணவர்களுக்கும் ஈஸிதான். ஒரு மதிப்பெண் வினாக்களில் இரண்டு குழப்பும் வகையில் இருந்தது. ஆனாலும், பொறுமையாக யோசித்தால் எழுதிவிடலாம். கட்டாய வினாக்கள்தான் விடை எழுத முடியாத வகையில் இருந்தது.
சரண்யா: கணக்குப்பதிவியல் பாடத்தில் பயிற்சி செய்த வினாக்கள் பெரும்பான்மையாக வந்திருந்தது. அதிக மதிப்பெண் எளிதில் பெற்று விடலாம். ஒரு மதிப்பெண் பகுதியில் இரண்டு வினாக்கள், இரண்டு மற்றும் மூன்று மதிப்பெண் பகுதிகளில் கட்டாய வினாக்கள் மாணவர்களை குழப்பும் வகையில் இருந்தது. இதனால் சதம் பெறும் மாணவர்களின் எண்ணிக்கை குறையலாம்.
பூமிகா:வேதியியல் பாடத்தேர்வு எளிமையாக இருக்கும் என எதிர்பார்த்தோம். ஆனால் ஒரு மதிப்பெண், குறுவினா, நெடுவினா என அனைத்து பகுதிகளிலும் சில கேள்விகள் பயிற்சி செய்யாதவையாக வந்திருந்தன. பதட்டமில்லாமல் யோசித்தால் விடை எழுதி விடலாம். மிகவும் கடினமானதாக இல்லை.
ஹர்ஷினி: வேதியியல் தேர்வில் பயிற்சி செய்த பகுதிகள் பலவும் வரவில்லை. எதிர்பார்த்த வினாக்கள் குறைவாக இருந்ததால் ஏமாற்றமாக இருந்தது. இருப்பினும், விடை எழுதும் வகையில்தான் இருந்தன. எளிமையாகவும் அதே சமயம் முக்கியத்துவம் இல்லை என நினைத்த வினாக்கள் கேட்கப்பட்டதால் குழப்பம் ஏற்பட்டது.
அமீர்பஷரத்முகமது: வேதியியல் தேர்வு எளிமையாக இருந்தது. வினாக்களை புரிந்துகொண்டு விடை எழுதினால் சதம் பெற்றுவிடலாம். அனைத்து மாணவர்களும் விடை எழுதும் வகையில்தான் வினாத்தாள் வடிவமைக்கப்பட்டிருந்தது. தேர்ச்சி பெறுவதும் எளிமைதான். பயிற்சி வினாக்கள் பல வராதது ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.
ராகவ்: வேதியியல் பாடத்தேர்வில், ஒரு மதிப்பெண் பகுதியில் மூன்று வினாக்கள் குழப்பம் வகையில் இருந்தது. ஆனால் பயிற்சி வினாக்கள் மட்டுமின்றி, புத்தகம் முழுவதும் படித்திருந்ததால் விடை எழுத முடிந்தது. மற்ற பகுதி வினாக்களும் பயிற்சி செய்யாதவையாக இருப்பினும், கடினமானதாக இல்லை.
தனஸ்ரீ: வேதியியல் தேர்வு எளிமையாக வரும் என எதிர்பார்த்தோம். ஆனால் அனைத்து மாணவர்களுக்கும் எளிமையானதாக இல்லை. ஒரு மதிப்பெண் வினாக்களில் பாடப்பகுதிகளின் உள்ளிருந்து கேட்கப்பட்டிருப்பதால் சதம் குறைவதற்கான வாய்ப்பு உள்ளது. மற்ற பகுதிகளில் சுலபமாக விடை எழுதும் வகையில்தான் வினாக்கள் இருந்தன.

