/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'ஒரு கிராமம் ஒரு அரச மரம்' திட்டம் இன்று துவக்கம்
/
'ஒரு கிராமம் ஒரு அரச மரம்' திட்டம் இன்று துவக்கம்
ADDED : மார் 20, 2025 05:35 AM
கோவை : பேரூர் ஆதினம் சாந்தலிங்க ராமசாமி அடிகளார் நுாற்றாண்டு விழாவை முன்னிட்டு, தமிழகத்தில் ஒவ்வொரு கிராமத்திலும், ஒரு அரச மரக்கன்று நட முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து, 'ஒரு கிராமம் ஒரு அரச மரம்' எனும் திட்டம் இன்று, பேரூர் சாந்தலிங்க அடிகளார் தமிழ் கல்லுாரி வளாகத்தில் துவங்குகிறது.
இதுகுறித்து, பேரூர் ஆதினம் சாந்தலிங்க மருதாசல அடிகளார் கூறியதாவது:
ஆக்ஸிஜன் அதிகம் தரும் அரச மரம், மருத்துவ சிறப்பு வாய்ந்தது. தற்போது, அரச மரம் அழிந்து வருகிறது. இதை மீட்க, சாந்தலிங்க ராமசாமி அடிகளார் நுாற்றாண்டு விழாவை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் அரச மரக்கன்று நடவு செய்வதை, இலக்காக கொண்டு 'ஒரு கிராமம் ஒரு அரச மரம்' எனும் திட்டம் நாளை(இன்று) துவங்கப்படுகிறது.
ஈஷா காவேரி கூக்குரல் இயக்கத்தின் வழிகாட்டுதலின்படி, முதற்கட்டமாக கோவை மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் தலா 1,000 என, 2,000 கிராமங்களில் அரச மரங்கள் நடவு செய்ய உள்ளோம். படிப்படியாக மற்ற மாவட்டங்களிலும் மரக்கன்று நடப்படும்.
இவ்வாறு, அவர் கூறினார்.
காவேரி கூக்குரல் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தமிழ்மாறன், நொய்யல் அறக்கட்டளை அறங்காவலர் ஆறுச்சாமி, கோவை கட்டட கட்டுமானம் மற்றும் ஒப்பந்ததாரர்கள் கூட்டமைப்பின் தலைவர் ராமநாதன் ஆகியோர் உடனிருந்தனர்.