/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'ஆன்லைன்' விளையாட்டுகள் போதை போல் ஆபத்து! போலீஸ் கமிஷனர் எச்சரிக்கை
/
'ஆன்லைன்' விளையாட்டுகள் போதை போல் ஆபத்து! போலீஸ் கமிஷனர் எச்சரிக்கை
'ஆன்லைன்' விளையாட்டுகள் போதை போல் ஆபத்து! போலீஸ் கமிஷனர் எச்சரிக்கை
'ஆன்லைன்' விளையாட்டுகள் போதை போல் ஆபத்து! போலீஸ் கமிஷனர் எச்சரிக்கை
ADDED : அக் 25, 2024 10:28 PM

கோவை : ''போதைப்பொருட்கள் ஒருவரின் வாழ்க்கையை, எவ்வாறு அழிக்கிறதோ, அதே போல் ஆன்லைன் விளையாட்டுகளும் அழிக்கின்றன. மாணவர்கள் நினைத்தால், ஆன்லைன் விளையாட்டில் அடிமையாவதை குறைக்க முடியும்,'' என மாணவ, மாணவியரை கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் எச்சரித்துள்ளார்.
தமிழ்நாடு ஆன்லைன் விளையாட்டு ஆணையம் சார்பில், 'மாணவர்கள் ஆன்லைன் விளையாட்டில் அடிமையாவதால் ஏற்படும் தீமை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி', இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லுாரியில் நேற்று நடந்தது.
மேற்கு மண்டல ஐ.ஜி., செந்தில்குமார் பேசுகையில், ''மாணவர்கள் ஆன்லைன் விளையாட்டு மற் றும் இன்டர்நெட்டில், தங்களை ஈடுபடுத்திக்கொள்வதை குறைத்துக்கொண்டு, படிப்பில் கவனம் செலுத்த வேண்டும்,'' என்றார்.
கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் பேசுகையில், ''சூதாட்டம் என்பது மனித கலாசாரம் தோன்றிய போதே உருவானது. தற்போது காலத்திற்கு ஏற்ப, ஆன்லைன் ஆக மாறியுள்ளது. ஒவ்வொருவரும் அந்தந்த வயதுக்கு ஏற்றவாறு எது தேவை, எது தேவையில்லை என்பதை ஆராய்ந்து பார்க்க வேண்டும். போதைப்பொருட்கள் ஒருவரின் வாழ்வை எப்படி அழிக்கின்றதோ, அதேபோல் தான் இந்த இணைய வழி விளையாட்டுகளும், மாணவர்களின் வாழ்வை அழிக்கின்றன.
அதிகமாக ஆன்லைன் விளையாட்டுகளில் கவனம் செலுத்தினால், மாணவர்களின் படிப்பு திறன், கவனிக்கும் திறன் குறைந்து விடும். மாணவர்கள் ஆன்லைன் விளையாட்டுகள், சூதாட்ட தளங்களை தவிர்த்து, படிப்பில் கவனம் செலுத்த வேண்டும். மாணவர்கள் நினைத்தால் முடியும்,'' என்றார்.
நிகழ்ச்சியில், மோசடி நபர்கள் எப்படி ஏமாற்றுகின்றனர் என்பதை, மேஜிக் நிகழ்ச்சி வாயிலாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. தமிழ்நாடு ஆன்லைன் விளையாட்டு ஆணையத்தின் உறுப்பினர் சாரங்கன், கோவை மாவட்ட எஸ்.பி., கார்த்திகேயன், போலீஸ் துணை கமிஷனர்கள் ஸ்டாலின், அசோக் குமார், சுகாசினி உள்ளிட்டோர் பங்கேற்றனர். பல்வேறு பள்ளி, கல்லுாரிகளை சேர்ந்த மாணவ, மாணவியர், பெற்றோர் பங்கேற்றனர்.