/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
30 நாட்களில் வந்த கருத்து 300 மட்டுமே!
/
30 நாட்களில் வந்த கருத்து 300 மட்டுமே!
ADDED : மார் 11, 2024 01:53 AM
கோவை;கோவை மாஸ்டர் பிளான் வரைவு, பொது மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டு ஒரு மாதமாகியும் இதுவரை 300 ஆட்சேபங்கள் மற்றும் ஆலோசனைகள் மட்டுமே வந்துள்ளதாகத் தெரியவந்துள்ளது.
கடந்த 1994ல் நடைமுறைக்கு வந்த கோவை மாஸ்டர் பிளானை, 2004ல் புதுப்பித்திருக்க வேண்டும். ஆனால், தமிழகத்தின் இரண்டாவது பெரிய நகரமாக கோவை வளர்ந்து, திட்டக்குழுமப் பகுதிகளும் பெரும் வளர்ச்சியடைந்த பின், 20 ஆண்டுகள் கழித்து இப்போதுதான் புதுப்பிக்கப்படவுள்ளது.
வரும் 2041 ல் கோவையின் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு, மேலும் பல உள்ளாட்சிகள் சேர்க்கப்பட்டு, 1531.57 சதுர கி.மீ., பரப்பளவுக்கு புதிய மாஸ்டர் பிளான் வரைவு தயாரிக்கப்பட்டுள்ளது. அரசிடம் சமர்ப்பிக்கப்பட்ட வரைவு மாஸ்டர் பிளான், கடந்த பிப்.,11 ல் அமைச்சர் உதயநிதியால் வெளியிடப்பட்டது.
இந்த வரைவு, வரும் ஏப்., 11 வரையிலுமாக 60 நாட்களுக்கு மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. இதற்காக, புதிதாக இணையதளம் https://www.coimbatorelpa.com என்ற முகவரியில் துவக்கப்பட்டுள்ளது. அதில் மட்டுமின்றி, 'க்யூஆர்' கோடு ஸ்கேன் செய்தும், 'மாஸ்டர் பிளான்' அறிக்கையை படிக்கலாம்.
ஆனால், இதன் சுருக்கம் கூட தமிழில் இல்லை; சர்வே எண்கள் தவறாகக் குறிக்கப்பட்டுள்ளன, நகல் அதிக விலை, எளிமைப்படுத்தித் தரவில்லை என்று பல தரப்பிலிருந்தும் இந்த வரைவு குறித்து கடும் அதிருப்தி பரவியுள்ளது. பல்வேறு தொழில் அமைப்புகளும் இதுகுறித்து, சிறப்புக் கூட்டங்கள், பி.பி.டி., கலந்துரையாடல் வழியாக விழிப்புணர்வை ஏற்படுத்த முயற்சி செய்து வருகின்றன.
வரைவைப் பார்த்து மக்கள் தரும் ஆட்சேபங்கள் மற்றும் ஆலோசனைகள் பரிசீலிக்கப்பட்டு, இந்த வரைவில் திருத்தம் செய்யப்பட்டு, இறுதியாக புதிய மாஸ்டர் பிளான் வெளியிடப்படும். கோவையின் வளர்ச்சியை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்லும் வகையில், இதற்கான கருத்துகளை வழங்க வேண்டியது, கோவை மக்களின் கடமையாகும்.
கடந்த பிப்.,11 லிருந்து, 30 நாட்களில் மின்னஞ்சல் மற்றும் எழுத்துப்பூர்வமாக ஆட்சேபங்கள், ஆலோசனைகள் 300 மட்டுமே வரப்பெற்றுள்ளதாக நகர ஊரமைப்புத்துறை அதிகாரிகள் தகவல் பகிர்கின்றனர்.
கோவை மாஸ்டர் பிளான் பகுதியில், 25 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வாழும் நிலையில், இது மிகமிகக் குறைவாகும்.
அதிலும் நிலப்பயன்பாடு மாற்றம், திட்டச்சாலைகள் குறித்த ஆட்சேபங்கள் மற்றும் ஆலோசனைகளே அதிகம் வந்துள்ளதாகத் தெரிய வந்துள்ளது. திட்டச்சாலைகளைக் கைவிடக்கூடாது, நிலத்தைக் கையகப்படுத்தி அவற்றை அமைக்க வேண்டுமென்றும், மறுபுறத்தில் அவற்றைக் கைவிட வேண்டுமென்றும் இரு விதமான கருத்துகளும் வந்துள்ளதாக அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

