ADDED : ஏப் 15, 2026 08:38 PM
மேட்டுப்பாளையம்: 'சமூக வலைதளங்களில் வரும் மருத்துவ தகவல்கள் நமது உடலமைப்புக்கு ஏற்றதா என்பதை ஒரு மருத்துவரால் மட்டுமே தீர்மானிக்க முடியும்' என தோலம்பாளையம் அரசு உதவி ஆயுர்வேத மருத்துவர் மேகலை தெரிவித்தார்.
கோடை விடுமுறையில் பள்ளி மாணவர்கள், பிளஸ் 2 பொதுத்தேர்வு முடித்து கல்லுாரிக்கு செல்ல உள்ள மாணவ, மாணவியர் என பலரும், சமூக வலைதளங்கள் உள்ளிட்டவை பார்த்து, உடல் எடை குறைப்பு மற்றும் பிற செயல்களில் ஈடுபடக்கூடாது. மருத்துவர் ஆலோசனை இன்றி சுயமருத்துவம் கூடாது என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
ஆயுர்வேத மருத்துவர் மேகலை கூறியதாவது:-
சமூக வலைதளங்களில் வரும் மருத்துவ தகவல்கள் பலராலும் பகிரப்படுபவை. அவை உங்கள் உடலமைப்புக்கு ஏற்றதா என்பதை, ஒரு மருத்துவரால் மட்டுமே தீர்மானிக்க முடியும். சமூக வலைதளங்களில், உடல் எடை குறைப்புக்கு பரிந்துரைக்கப்படும் பொருட்கள், குறிப்பிட்ட அளவில், குறிப்பிட்ட சுத்தி முறைகளுக்குப் பின், மருந்துடன் சேர்க்கப்பட வேண்டியவை. அவற்றை நேரடியாக உட்கொள்வது கடுமையான நச்சுதன்மையை உண்டாக்கும். எந்தவொரு மருத்துவ முறையையும் பின்பற்றுவதற்கு முன், அந்த துறையில் முறைப்படி பயின்ற, அரசு அங்கீகாரம் பெற்ற மருத்துவர்களிடம் ஆலோசிப்பது மிகவும் அவசியம்.
இவ்வாறு, அவர் கூறினார்.--------
