ADDED : ஜன 14, 2026 05:26 AM
மேட்டுப்பாளையம்: -: மேட்டுப்பாளையம் நெல்லித்துறை சாலையில், நீலகிரி கூட்டுறவு விற்பனைச் சங்கம், செயல்பட்டு வருகிறது. இங்கு, நீலகிரி மாவட்டம் ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, கேத்தி, கூடலூர் என பல்வேறு இடங்களில் உற்பத்தி செய்யப்படும் உருளைக்கிழங்குகள் ஏலம் விடப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.
கடந்தாண்டு டிசம்பர் முதல் அதிகபட்சமாக 45 கிலோ எடை கொண்ட ஒரு மூட்டை, ஊட்டி உருளைக்கிழங்குகள் ரூ.1,600 முதல் ரூ.1,900 வரை விற்பனை ஆனது. அதன் பின் விலை உயர்ந்து, நேற்று ஊட்டி கிழங்குகள் அதிகபட்சமாக ரூ.2,040 க்கு விற்பனை ஆனது. சுமார் 1,000 மூட்டைகள் லோடு வந்தன.
நீலகிரி கூட்டுறவு விற்பனைச் சங்க அதிகாரி ஒருவர் கூறுகையில், 'கடந்தாண்டு நவம்பரில் 45 கிலோ மூட்டை ஒன்று ரூ.2,990 வரை விற்பனை ஆனது. அதன் பின், டிசம்பர் முதல் ரூ. 1,600 முதல் ரூ.1,900 வரை விற்பனை ஆனது. தற்போது வரத்து குறைந்துள்ளது. இதனால் மீண்டும் விலை உயர துவங்கியுள்ளது. நேற்று 1,000 மூட்டைகள்வந்தன. மூட்டை ஒன்று ரூ.2,040க்கு விற்பனை ஆனது' என்றார்.---
