/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாநகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பும்; ஆதரவும்
/
மாநகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பும்; ஆதரவும்
ADDED : ஜன 08, 2025 11:21 PM
சூலுார்; கோவை மாநகராட்சியுடன் தங்கள் ஊராட்சிகளை, இணைக்க எதிர்ப்பு தெரிவித்து, கிராம மக்கள் அரசுக்கு கடிதங்கள், இ- மெயில் அனுப்பி வருகின்றனர்.
கோவை மாநகராட்சியுடன் அருகில் உள்ள சூலுார் ஒன்றியத்தை சேர்ந்த சின்னியம்பாளையம், நீலம்பூர், மயிலம் பட்டி ஊராட்சிகள் இணைக்கப்பட உள்ளதாக அரசாணை வெளியிடப் பட்டுள்ளது. அதேபோல், பட்டணம் ஊராட்சி பேரூராட்சியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது.
இணைக்க எதிர்ப்பு
கோவை மாநகராட்சியுடன் தங்கள் கிராமங்களை இணைக்க, நீலம்பூர், மயிலம் பட்டி கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஆறு வாரங்களுக்குள் தங்கள் ஆட்சேபனைகளை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மை செயலாளருக்கு கடிதம் வாயிலாக தெரிவிக்கலாம், என, அரசு அறிவித்தது.
இதையடுத்து, மயிலம் பட்டி ஊராட்சியில், மாநகராட்சியுடன் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நூற்றுக்கணக்கான மக்கள், கடிதங்களை அனுப்பினர். மேலும், ஏராளமானோர் இ- மெயிலும் அனுப்பி வருகின்றனர்.
நீலம்பூரில் கூட்டம் நடத்தப்பட்டு, மக்களிடம் கருத்து கேட்கப்பட்டது. தெடர்ந்து, கலெக்டரிடம் முறையிடுவது, ஆட்சேபனை கடிதங்கள் அனுப்புவது என, முடிவு செய்யப்பட்டது. இதேபோல், பட்டணம் ஊராட்சி மக்கள், கோவை மாநகராட்சியுடன் இணைக்க வேண்டும், என, கோரி கடிதங்களை அனுப்பி வருகின்றனர்.
இதுகுறித்து பட்டணம் ஊராட்சி மக்கள் மன்றத்தினர் கூறுகையில்,' பட்டணம் ஊராட்சியில் தற்போது, 35 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். கூடுதல் குடிநீர் வசதி, சாலை வசதி, போக்குவரத்து வசதி ஆகிய அடிப்படை வசதிகள் தற்போது போதுமானதாக இல்லை.
மாநகராட்சியுடன் இணைக்கும் போது, கிடைக்கும். அதனால், மாநகராட்சியுடன் இணைக்க கோரி, கடிதங்களை அனுப்பி வருகிறோம்,' என்றனர்.