/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஊராட்சிகளில் துாய்மை காவலர்கள் நியமிக்க உத்தரவு
/
ஊராட்சிகளில் துாய்மை காவலர்கள் நியமிக்க உத்தரவு
ADDED : ஜூலை 20, 2025 10:40 PM
அன்னுார்; கோவை மாவட்டத்தில் 12 ஒன்றியங்களில், 1,178 தூய்மை காவலர்களை நியமிக்க, கலெக்டர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
கோவை மாவட்ட கலெக்டர் பவன் குமார் அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கும் பிறப்பித்துள்ள உத்தரவு :
மக்கள் தொகை வளர்ச்சி மற்றும் நகரமயமாக்கல் காரணமாக, கிராம ஊராட்சிகளில் குப்பை சேகரிப்பதில் பணியாளர் பற்றாக்குறை உள்ளது. எனவே, தூய்மை பணியாளர்கள் பற்றாக்குறையாக உள்ள நகர்ப்புறத்தை ஒட்டிய கிராம ஊராட்சிகள் மற்றும் 10 ஆயிரம் மக்கள் தொகைக்கு அதிகமாக உள்ள ஊராட்சிகளில், குப்பை அகற்ற வெளி முகமை மூலம் (அவுட் சோர்சிங்) பணியாளர்களை நியமிக்க வேண்டும்.
நகர்ப்புறத்தை ஒட்டி உள்ள கிராம ஊராட்சிகளில் 401 தூய்மை காவலர்களும், 10 ஆயிரம் மக்கள் தொகைக்கு அதிகமாக உள்ள ஊராட்சிகளில் 777 தூய்மை காவலர்களும் என மொத்தம் 1178 தூய்மை காவலர்களை, அரசு விதிமுறைப்படி அவுட்சோர்சிங் மூலம் நியமிக்க வேண்டும். அதற்கான செலவை ஊராட்சி நிதியில் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு, உத்தரவில் தெரிவித்துள்ளார்.
இதில் அன்னுார் ஒன்றியத்தில், காரே கவுண்டம்பாளையம் ஊராட்சியில் 20, மசக்கவுண்டன் செட்டிபாளையத்தில் 31, ஒட்டர்பாளையம் ஊராட்சியில் 21 பேர் என 72 பேர் நியமிக்கப்படுகின்றனர். சர்க்கார் சாமக் குளம் ஒன்றியத்தில், கொண்டையம்பாளையம் ஊராட்சியில் 35, வெள்ளமடை ஊராட்சியில் 13 பேர் என 48 பேர் நியமிக்கப்படுகின்றனர்.

