ADDED : ஏப் 14, 2026 05:59 PM
கோவை: எரிபொருள் தீர்ந்ததாக கூறி, தாமதமாக இயக்கியதோடு, பராமரிப்பு சேவையும் மோசமாக இருந்ததாக கூறி வழக்கு தொடுத்தவருக்கு, ரூ. 35 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டுமென, நுகர்வோர் கோர்ட் தீர்ப்பளித்தது.
ராம்நகரை சேர்ந்தவர் பூபதிராசா. இவர் கோல்டுவின்ஸ் பகுதியில் உள்ள ஸ்ரீ ஆட்டோ டிராவல்ஸ் நிறுவனத்தின் பேருந்தில் (TN 66 AM 2295) 2025 ஜூலை 10ம் தேதி திருவண்ணாமலையில் இருந்து கோவை வர டிக்கெட் முன்பதிவு செய்திருந்தார்.
முன்பதிவு விவரங்களில், காலை 10:05 மணிக்கு பஸ் புறப்பட்டு, மதியம் 3:30 மணிக்கு கோவை ஆம்னி பஸ் ஸ்டாண்ட் வந்தடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் அவிநாசி ரோடு, பி.எஸ்.ஜி., தொழில்நுட்ப கல்லுாரி அருகே பஸ் நின்றது. பலமுறை விசாரித்த பிறகு, எரிபொருள் தீர்ந்துவிட்டதாக ஓட்டுநர் பதிலளித்தார். இதனால் ஒரு மணி நேரம் 20 நிமிடங்கள் தாமதம் ஏற்பட்டது; மாலை 4:50 மணிக்கு தான், பஸ் சேருமிடத்தை அடைந்தது.
இதனால் புகார்தாரருக்கு தொழில்ரீதியான முக்கிய பணி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பேருந்தின் உட்புறம் சுகாதாரமற்றதாகவும், படுக்கை விரிப்புகள், திரை சீலை அழுக்காகவும் இருந்துள்ளன.
இதுகுறித்து புகைப்பட ஆதாரங்களுடன் எதிர்தரப்புக்கு, 2025 ஜூலை 16ம் தேதி வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. கோவை ஒருங்கிணைந்த நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கும் தொடுக்கப்பட்டது.
விசாரித்த நீதிபதி தட்சணாமூர்த்தி, உறுப்பினர் சுகுணா பிறப்பித்த உத்தரவில், ' எதிர்தரப்பால் புகார்தாரருக்கு ஏற்பட்ட மன உளைச்சல், அலைச்சல், சேவை குறைபாட்டிற்கு இழப்பீடாக, ரூ. 25 ஆயிரம் மற்றும் புகார் செலவுத்தொகையாக ரூ. 10 ஆயிரம் சேர்த்து வழங்க வேண்டும். இத்தொகையை இரு மாதங்களுக்குள் வழங்காவிடில், 12 சதவீத வட்டியுடன் அளிக்க வேண்டும்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
