/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சினிமா காட்சி ரத்தானதால் இழப்பீடு வழங்க உத்தரவு
/
சினிமா காட்சி ரத்தானதால் இழப்பீடு வழங்க உத்தரவு
ADDED : நவ 04, 2025 11:58 PM
கோவை: சினிமா காட்சி ரத்து செய்யப்பட்டதால், இழப்பீடு வழங்க, நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டது.
கோவை, பி.என்.புதுார், நியூ தில்லை நகரை சேர்ந்தவர் நிஷாந்த். குடும்பத்தினருடன் 'ஆவேசம்' என்ற திரைப்படம் பார்ப்பதற்காக, 'புக் மை ேஷா ஆப்' வாயிலாக, கே.ஜி.சினிமா தியேட்டரில் முன் பதிவு செய்தார்.
நான்கு டிக்கெட்டுக்கு 841 ரூபாய் கட்டணம் செலுத்தினார். அதன்படி, 2024, மே 11ல் காலை 10 மணி காட்சிக்கு சென்று, ஸ்கிரீன் 1ல், குடும்பத்தினருடன் காத்திருந்தார். 50 நிமிடங்கள் ஆகியும் சினிமா திரையிடப்படவில்லை. காலை காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
திரைப்படத்தை பார்க்க செலுத்திய பணத்தை, திரும்ப கொடுத்து விட்டனர். சினிமா பார்க்க முடியாததால், மன உளைச்சல் அடைந்த நிஷாந்த் இழப்பீடு வழங்க கோரி, கோவை நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில், வழக்கு தாக்கல் செய்தார். அதில், குறைந்த அளவு பார்வையாளர்கள் வந்ததால், சினிமா காட்சி ரத்து செய்யப்பட்டதாக, தெரிவித்து இருந்தார்.
எதிர்தரப்பில் தாக்கல் செய்த பதில் மனுவில், 'தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் சரி செய்யும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் கோளாறு சரி செய்ய முடியாததால், வேறு வழியின்றி சினிமா காட்சி ரத்து செய்யப்பட்டது. இது குறித்து காட்சிக்கு வந்தவர்களிடம் உரிய தகவல் தெரிவிக்கப்பட்டு பணம் திரும்ப வழங்கப்பட்டது' என்று தெரிவித்து இருந்தனர்.
விசாரித்த கூடுதல் ஆணைய தலைவர் தட்சிணாமூர்த்தி பிறப்பித்த உத்தரவில், 'எதிர்மனுதாரர்கள் சேவை குறைபாடு செய்துள்ளதால், மனுதாரருக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு இழப்பீடாக, 20,000ரூபாய், வழக்கு செலவு, 10,000 ரூபாய் வழங்க வேண்டும்' என்று தெரிவித்துள்ளார்.

