/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
முதியவரின் கையை கடித்த குதிரை!
/
முதியவரின் கையை கடித்த குதிரை!
ADDED : நவ 04, 2025 11:58 PM
வடவள்ளி: கஸ்தூரிநாயக்கன்பாளையத்தில், சாலைகளில் சுற்றித்திரியும் குதிரைகள், இருசக்கர வாகனத்தில் வந்த முதியவர் மீது மோதி, அவரின் கையை கடித்தது.
சோமையம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட காளப்பநாயக்கன்பாளையம், கஸ்தூரிநாயக்கன்பாளையம், சோமையம்பாளையம், நவாவூர் சாலை, வடவள்ளி சாலையில், கடந்த சில மாதங்களாகவே, 5க்கும் மேற்பட்ட குதிரைகள் சுற்றி வருகின்றன.
இந்த குதிரைகள், சாலைகளின் குறுக்கே ஓடுவதால், அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி கீழே விழுந்து விபத்துக்குள்ளாவது தொடர்கதையாகி வருகிறது.
இந்நிலையில், சோமையம்பாளையம் ஊராட்சியில், வாட்டர்மேனாக பணிபுரிந்து வரும் ஜெயபால்,60, நேற்று அதிகாலை, 6:00 மணிக்கு, கஸ்தூரிநாயக்கன்பாளையம், நேரு நகரில், வீடுகளுக்கு தண்ணீர் திறந்துவிட்டு, தனது இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார்.
அப்போது, குறுக்கு சாலையில் இருந்து அதிவேகமாக, இரு குதிரைகள் ஓடிவந்தன. இதில் ஒரு குதிரை, ஜெயபாலின் இருசக்கர வாகனத்தில் மோதியது. ஜெயபால் நிலை தடுமாறி கீழே விழுந்தார்.
அப்போது, குதிரை அவரின் வலது கையை கடித்து, அவரின் நெஞ்சில் காலால் மிதித்து சென்றது. படுகாயமடைந்த ஜெயபாலை, அருகிலிருந்தவர்கள் மீட்டு, மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
வாகன ஓட்டிகளுக்கு தொடர்ந்து இடையூறாக, சாலையில் சுற்றித்திரியும் குதிரைகளை பிடித்து, அதன் உரிமையாளர்களுக்கு, ஊராட்சி நிர்வாகம் அபராதம் விதிக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

