ADDED : மார் 20, 2024 10:18 PM
கோவை : பி.எஸ்.என்.எல்., நிர்வாகம் சேவை குறைபாடு செய்ததால், இழப்பீடு வழங்க நுகர்வோர் ஆணையம் உத்தரவிட்டது.
கோவை, வடவள்ளியை சேர்ந்த வள்ளியப்பன், பாரதியார் பல்கலை வளாகத்தில் செயல்படும் பி.எஸ்.என்.எல்., அலுவலகத்தில் தொலைபேசி இணைப்பு பெற்றார்.
தொலைபேசி இணைப்பை சாய்பாபா காலனி அலுவலகத்துக்கு, மாற்றக்கோரி விண்ணப்பித்தார். அதற்கான கேபிள் வசதி இல்லை என்று கூறி, பி.எஸ்.என்.எல்., நிர்வாகம் மறுத்தது.
இதனால் இணைப்பை 2002, ஜூன் 18ல் திருப்பி அளித்து விட்டு, வைப்புத்தொகையை திருப்பித் தரக்கோரி விண்ணப்பித்தார்.
தராமல் பல மாதங்கள் இழுத்தடித்ததாக, இழப்பீடு வழங்க கோரி, கோவை நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில், வழக்கு தாக்கல் செய்தார்.
விசாரித்த ஆணைய தலைவர் தங்கவேல், ''எதிர் மனுதாரர் சேவை குறைபாடு செய்துள்ளதால், மனுதாரருக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு இழப்பீடாக, 5,000 ரூபாய், வழக்கு செலவு, 5,000 ரூபாய் வழங்க வேண்டும்,'' என்று உத்தரவிட்டார்.
