/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பாதாள சாக்கடை 'பம்பிங் ஸ்டேஷன்' பணியை விரைவுபடுத்த உத்தரவு
/
பாதாள சாக்கடை 'பம்பிங் ஸ்டேஷன்' பணியை விரைவுபடுத்த உத்தரவு
பாதாள சாக்கடை 'பம்பிங் ஸ்டேஷன்' பணியை விரைவுபடுத்த உத்தரவு
பாதாள சாக்கடை 'பம்பிங் ஸ்டேஷன்' பணியை விரைவுபடுத்த உத்தரவு
ADDED : செப் 19, 2024 11:12 PM

கோவை : 'அம்ருத் 2.0' திட்டத்தில், ரூ.185 கோடியில், கோவை வடக்கு மற்றும் கிழக்கு மண்டலங்களில் விடுபட்ட பகுதிகளில், பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இப்பணியை, பிப். 24ல் சென்னையில் இருந்து 'வீடியோ கான்பரன்ஸ்' முறையில், தமிழக முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார்.
கணபதி, காந்தி மாநகர், விளாங்குறிச்சி ரோடு ஆகிய இடங்களில் பாதாள சாக்கடை குழாய் பதித்தல் ஒரு 'பேக்கேஜ்', தண்ணீர் பந்தல், எஸ்.ஐ.எச்.எஸ்., காலனி மற்றும் ஒண்டிப்புதுாரில் விடுபட்ட இடங்களில் குழாய் பதிப்பது இன்னொரு 'பேக்கேஜ்' என இரு வேலையாக பிரித்து செய்ய முடிவு செய்யப்பட்டிருக்கிறது. இதில், நான்கு இடங்களில் 'பம்பிங் ஸ்டேஷன்' கட்டப்படுகிறது.
மொத்தம், 141.945 கி.மீ., நீளத்துக்கு குழாய் பதிக்கப்படும். 5,603 இடங்களில் ஆழ்நுழை குழிகள் (மேன் ஹோல்ஸ்) அமைக்கப்படும். 30 ஆயிரத்து, 128 வீடுகளுக்கு இணைப்பு வழங்கப்படும். ஏற்கனவே குழாய் பதித்த, 17 இடங்களில் ஒருங்கிணைப்பு பணி மேற்கொள்ளப்படும். வடக்கு மண்டலத்தில், 13, 18, 19, 25, 27, 28, 29வது வார்டுகள், மத்திய மண்டலத்தில், 48வது வார்டு, கிழக்கு மண்டலத்தில், 24, 55, 56, 57, 58வது வார்டு என, 13 வார்டுகள் பயன்பெறும்.
காந்தி மாநகர் பகுதியில் 'பம்பிங் ஸ்டேஷன்' கட்டும் பணியை, மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் நேற்று பார்வையிட்டார்.
திட்ட செயல்பாடுகள் குறித்து பொறியியல் பிரிவினர் விளக்கினர். 2026 மார்ச் வரை ஒப்பந்த காலம் இருப்பினும், மழை காலம் இருப்பதால், பணியை விரைந்து மேற்கொள்ள, ஒப்பந்த நிறுவனத்தினருக்கு கமிஷனர் அறிவுறுத்தினார்.
அதன்பின், 27வது வார்டு ஆவராம்பாளையம் சாந்தி நகரில் உள்ள உலகத்தமிழ் செம்மொழி மாநாடு நினைவு பூங்காவை சீரமைக்கவும், சங்கனுார் ஓடை இரு கரையிலும் தடுப்புச்சுவர் கட்டவும் பொறியியல் பிரிவினருக்கு அறிவுறுத்தல் வழங்கினார்.