ADDED : ஆக 14, 2025 08:56 PM

கோவை; ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில், உடல் உறுப்பு தான தினத்தை முன்னிட்டு, உயிர் காக்கும் கல்லீரல் தான கொடையாளர்களை கவுரவிக்கும் விழா மருத்துவமனை அரங்கில் நடந்தது.
உடல் உறுப்பு தானம் தினம் அதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில், ஆண்டுதோறும், ஆக., 13ம் தேதி அனுசரிக்கப்படுகிறது. இதன் வாயிலாக, உடல் உறுப்பு தானம் பதிவு செய்யும் எண்ணமும் ஊக்குவிக்கப்படுகிறது.
மூளைச்சாவு அடைந்தவர்கள் உடல் உறுப்பு தானம் செய்வது குறைவாக இருப்பதால், கல்லீரல் மாற்று சிகிச்சைக்கு காத்திருக்கும் நோயாளிகள் பெரும்பாலும், உயிருடன் உள்ளவர்களிடம் கல்லீரல் தானம் பெறுவதற்கே சார்ந்திருக்கும் சூழல் உள்ளது.
நோயாளிகளை, கல்லீரலின் ஒரு பகுதியை கொடுத்து அவரை காப்பாற்றும் நெருங்கிய உறவினர்கள் நிகழ்வில் கவுரவிக்கப்பட்டனர். அலைய்டு ஹெல்த் சயின்ஸ் மாணவர்கள் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வு நிகழ்வுகளை நடத்தினர்.
நிகழ்வில், மருத்துவமனை நிர்வாக அறங்காவலர் சுந்தர், இணை நிர்வாக அறங்காவலர் நரேந்திரன், கல்லீரல் மாற்று மயக்க மருந்து பிரிவு டாக்டர் பிரேம்சந்த், டாக்டர் ஜெயபால், உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.