/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வேலை நிறுத்தத்தால் ஊராட்சி அலுவலகங்களில் பாதிப்பு; மறியலில் ஈடுபட்டவர்கள் கைது
/
வேலை நிறுத்தத்தால் ஊராட்சி அலுவலகங்களில் பாதிப்பு; மறியலில் ஈடுபட்டவர்கள் கைது
வேலை நிறுத்தத்தால் ஊராட்சி அலுவலகங்களில் பாதிப்பு; மறியலில் ஈடுபட்டவர்கள் கைது
வேலை நிறுத்தத்தால் ஊராட்சி அலுவலகங்களில் பாதிப்பு; மறியலில் ஈடுபட்டவர்கள் கைது
ADDED : ஜூலை 09, 2025 10:22 PM

கோவில்பாளையம்; எஸ்.எஸ்.குளம் ஒன்றியத்தில், ஊராட்சி அலுவலகங்களில் நேற்று பணிகள் பாதிக்கப்பட்டன.
மத்திய, மாநில, அரசு அலுவலகங்களில் உள்ள பல லட்சம் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். பழைய பென்ஷன் திட்டத்தை அமுல்படுத்த வேண்டும்.
தொழிலாளர்கள் உரிமையை பறிக்கும் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும். குறைந்தபட்ச சம்பளம் மற்றும் குறைந்தபட்ச ஓய்வூதியத்தை உயர்த்த வேண்டும், உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தொழிற்சங்கங்கள் சார்பில், 9ம் தேதி அகில இந்திய வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
சர்க்கார் சாமக்குளம் ஒன்றியத்தில் மொத்தம் உள்ள ஏழு ஊராட்சிகளில் ஆறு ஊராட்சி செயலர்கள் வேலை நிறுத்தத்தில் பங்கேற்றனர். இதனால் ஊராட்சி அலுவலகங்களுக்கு வந்த பொதுமக்கள் பல்வேறு பணிகளை செய்ய முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். எஸ்.எஸ்.குளம் ஒன்றிய அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் உட்பட 50 சதவீத ஊழியர்கள் நேற்று பணிக்கு வரவில்லை. இதனால் ஒன்றிய அலுவலகத்திலும் பணிகள் பாதிக்கப்பட்டன. அன்னூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், 25 சதவீத ஊழியர்கள் நேற்று பணிக்கு வரவில்லை. 21 ஊராட்சிகளிலும் வழக்கம்போல் பணிகள் நடைபெற்றன. அன்னூரில் உள்ள அரசு போக்குவரத்து கழக கிளையில் 52 பஸ்களும் வழக்கம்போல் இயங்கின. எனினும் சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யு.சி., எல்.பி. எப்., தொழிற்சங்கங்களை சேர்ந்த 35 பேர் நேற்று பணிக்கு வரவில்லை.
பெ.நா.பாளையம்
பெரியநாயக்கன்பாளையம் சி.பி.ஐ.(எம்) ஒன்றிய குழு உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்க அமைப்புகளின் சார்பில் பெரியநாயக்கன்பாளையம் பி.எஸ்.என்.எல்., அலுவலகம் முன்பு மறியல் போராட்டம் நடந்தது. போராட்டத்தில் ஈடுபட்ட, 91 பெண்கள் உட்பட, 281 பேர் கைது செய்யப்பட்டு தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டு, நேற்று மாலை விடுவிக்கப்பட்டனர்.
----பெரியநாயக்கன்பாளையம், துடியலூர், நரசிம்மநாயக்கன்பாளையம், சின்னதடாகம் உள்ளிட்ட பகுதிகளில் இயல்பு வாழ்க்கைக்கு பாதிப்பு இல்லை. பள்ளி, கல்லூரிகள் வழக்கம் போல இயங்கின. கடைகள், ஓட்டல்கள் திறந்திருந்தன. பெரும்பாலான தனியார் தொழிற்சாலைகளும் இயங்கின. சில தொழிற்சாலைகளில் ஒரு சில தொழிற்சங்கங்களின் தொழிலாளர்கள் பணிக்கு வரவில்லை. இயல்பான போக்குவரத்து இருந்தது.
சூலூர்
சூலூர் பி.எஸ்.என்.எல்., அலுவலகம் எதிரில் நடந்த மறியலில், சி.ஐ.டி.யு., மாவட்ட துணை செயலாளர் கோபாலகிருஷ்ணன், சி.பி.எம்., தாலுகா செயலாளர் சந்திரன், ஜோதிபாசு,, ரவீந்திரன் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர். அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். மறியலால் திருச்சி ரோட்டில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மறியலில் ஈடுபட்டோரை போலீசார் கைது செய்தனர்.
மேட்டுப்பாளையம்
மத்திய அரசை கண்டித்து மேட்டுப்பாளையம் அஞ்சல் அலுவலகம் முன்பு, சி.ஐ.டி.யு., தொழிற்சங்கத்தினர் மறியல் செய்தனர். மாவட்டத் துணைத் தலைவர் ரத்தினகுமார், தாலுகா தலைவர் கனகராஜ் ஆகியோர் தலைமையில் போராட்டம் நடந்தது. மறியல் செய்தவர்கள் பின்பு கலைந்து சென்றனர்.
இதே கோரிக்கைகளை வலியுறுத்தி காரமடையில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநில குழு உறுப்பினர் ராஜலட்சுமி தலைமையில் ரயில் மறியல் போராட்டம் செய்ய முயன்றனர். ரயில்வே ஸ்டேஷனுக்கும் செல்லும் வழியிலேயே போலீசார், இவர்களை 31 நபர்களை கைது செய்தனர். பின்னர் விடுதலை செய்தனர்.