/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வீட்டு மனைகளை வரன்முறைபடுத்த முடியாமல் பொது மக்கள் தவிப்பு கட்டணத்தை பெற மறுக்கும் ஊராட்சிகள்
/
வீட்டு மனைகளை வரன்முறைபடுத்த முடியாமல் பொது மக்கள் தவிப்பு கட்டணத்தை பெற மறுக்கும் ஊராட்சிகள்
வீட்டு மனைகளை வரன்முறைபடுத்த முடியாமல் பொது மக்கள் தவிப்பு கட்டணத்தை பெற மறுக்கும் ஊராட்சிகள்
வீட்டு மனைகளை வரன்முறைபடுத்த முடியாமல் பொது மக்கள் தவிப்பு கட்டணத்தை பெற மறுக்கும் ஊராட்சிகள்
ADDED : மார் 14, 2024 11:15 PM
சூலூர்;அனுமதியற்ற மனைப்பிரிவுகளை வரன்முறைப்படுத்தும் கட்டணத்தை பெற ஊராட்சி நிர்வாகங்கள் மறுப்பதால், மக்கள் அவதிக்குள்ளாகி உள்ளனர்.
ஊரக உள்ளாட்சி பகுதிகளில் கடந்த, 2016, அக்., 20ம் தேதிக்கு முன், நகர் ஊரமைப்பு துறையின் அனுமதியில்லாமல் உருவாக்கப்பட்ட மனைப்பிரிவுகளில் உள்ள மனைகளை வரன்முறைப்படுத்திக்கொள்ள அரசு சலுகை வழங்கியது. கடந்த பிப்., 29ம் தேதி கடைசி தேதியாக அறிவிக்கப்பட்டது.
கட்டணம் பெற மறுப்பு
இதையடுத்து, ஏராளமான மக்கள், நகர ஊரமைப்பு அலுவலகத்துக்கு, ஆன்லைன் வாயிலாக, 500 ரூபாய் செலுத்தி பதிவு செய்துள்ளனர். அரசுக்கு செலுத்த வேண்டிய வரன்முறை கட்டணத்தை வங்கிகள் வாயிலாக செலுத்தி வருகின்றனர்.
கோவை மாவட்டத்தில் உள்ள, 200 க்கும் மேற்பட்ட ஊராட்சிகளில், மனைகளை வரன்முறைப்படுத்திக்கொள்ள, லட்சக்கணக்கான மக்கள் விண்ணப்பித்து அதற்கான கட்டணங்களை செலுத்தி உள்ளனர். இந்நிலையில், ஊராட்சி நிர்வாகத்துக்கு செலுத்த வேண்டிய கட்டணத்தை கட்ட சென்றால், அங்கு கட்டணத்தை பெற மறுத்து திருப்பி அனுப்புவதாக புகார் எழுந்துள்ளது.
இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:
சேமித்த பணத்தை கொண்டு, எங்கு மலிவான விலையில் இடம் கிடைக்கும் என, அலைந்து ஒவ்வொருவரும் வீட்டுமனைகளை வாங்குகின்றனர். பெரும்பாலானோர், அங்கீகாரம் இல்லாத மனைப்பிரிவுகளில் மனைகளை வாங்கியுள்ளனர்.
ஏமாற்றம்
அவற்றை வரன்முறைப்படுத்தி கொள்ள அரசு கொடுத்த வாய்ப்பை பயன்படுத்தி, நகர ஊரமைப்பு துறைக்கு செலுத்த வேண்டிய கட்டணங்களை செலுத்தியுள்ளோம்.
இனி ஊராட்சிக்கு செலுத்த வேண்டிய கட்டணத்தை மட்டும் செலுத்தினால் போதும் என்ற நிலையில், பணத்துடன் அங்கு சென்றால் ஏமாற்றம் தான் மிஞ்சுகிறது. ஊராட்சியில் நகர ஊரமைப்பு துறையின் நெம்பர் இருந்தால் தான் கட்டணம் கட்ட முடியும் என்கின்றனர். அங்கு சென்றால், ஊராட்சியிலேயே நெம்பர் இருக்கும் என, கூறி திருப்பி அனுப்பி விடுகின்றனர். அங்கும் இங்கும் அலைய வேண்டிய நிலைதான் தினமும் உள்ளது.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.
கடந்த, பிப்., 21 ம்தேதி வரை அனைத்து ஊராட்சிகளிலும் வளர்ச்சி கட்டணங்கள் தடையின்றி பெறப்பட்டு வந்தன. அதற்கான ரசீதுகளும் உடனுக்குடன் வழங்கப்பட்டன.
ஆனால், அதற்கு பிறகு, பெரும்பாலான ஊராட்சிகளில் கட்டணங்கள் பெறப்படுவதில்லை.
ஆன்லைனில் ரசீது போட வேண்டிய நிர்பந்தம் ஊராட்சி செயலர்களுக்கு உள்ளதாக கூறப்படுகிறது. ஆண்டு வரி வசூல் உள்ளிட்ட வேலைகளுக்கு இடையில், வரன்முறை வளர்ச்சி கட்டணத்தை பெற மறுப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால், அரசுக்கு வரவேண்டிய வருவாய் குறைந்து வருவதாகவும் புகார் எழுந்துள்ளது.
இதுகுறித்து ஊரக வளர்ச்சி துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
வரன்முறை கட்டணம் செலுத்த வரும் மக்களிடம் கட்டணத்தை பெற்று, உரிய ரசீது உடனடியாக வழங்க வேண்டும் என, ஊராட்சி நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பலவகை ரசீது அனைத்தும் ஆன்லைன் வாயிலாக போடப்படுகிறது.
ஒரு சில ஊராட்சி பகுதிகளில் சர்வர் பிரச்னையால் பாதிப்பு ஏற்படுகிறது. அதையும் உடனுக்குடன் நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதனால், கட்டணங்கள் பெற மறுக்கும் ஊராட்சி நிர்வாகங்கள் குறித்து அந்தந்த பகுதி பி.டி.ஓ.,க்களிடம் புகார் தெரிவிக்கலாம்.
இவ்வாறு, அவர் கூறினார்.

