UPDATED : ஏப் 29, 2026 06:31 PM
ADDED : ஏப் 29, 2026 06:23 PM
வால்பாறை: பொள்ளாச்சி ரோட்டில் சிறுத்தை நடமாடுவதால், சுற்றுலா பயணியர் வாகனங்களில் கவனமாக செல்ல வேண்டும் என, வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.
வால்பாறை நகர் மற்றும் எஸ்டேட் பகுதியில், சமீப காலமாக யானைகள் நடமாட்டத்தை தொடர்ந்து, சிறுத்தையும் அதிக அளவில் நடமாட துவங்கியுள்ளது. கடந்த வாரம் வாழைத்தோட்டம் குடியிருப்பு பகுதி அருகே உள்ள தேயிலை செடிக்குள் பதுங்கிய சிறுத்தை, அங்கு விளையாடிக்கொண்டிருந்த குழந்தைகளை நோட்டமிட்டது. இதை அறிந்த பொதுமக்கள் குழந்தைகளை பாதுகாப்பாக வீட்டிற்குள் அழைத்து சென்றனர். அதன்பின், சப்தமிட்டு சிறுத்தையை விரட்டினர்.
இந்நிலையில், வால்பாறையிலிருந்து பொள்ளாச்சி செல்லும் வழித்தடத்தில், புதுத்தோட்டம் பகுதியில் நள்ளிரவில் சிறுத்தை சென்றதை, அந்த வழியாக சென்ற சுற்றுலா பயணியர் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர்.
வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது:
வால்பாறையில் கோடைவெயிலால், வனவிலங்குகள் தண்ணீர் மற்றும் உணவு தேடி வெளியே வருகின்றன. குறிப்பாக, யானைகள் பகல் நேரத்தில் ஆறுகளில் தண்ணீர் பருக வந்து செல்கின்றனர். இந்நிலையில் வால்பாறை - பொள்ளாச்சி செல்லும் மலைப்பாதையில் தற்போது இரவு நேரத்தில் சிறுத்தையும் தென்படுகிறது.
சுற்றுலா பயணியர் வாகனங்களில் செல்லும் போது, சிறுத்தை, யானை உள்ளிட்ட வனவிலங்குளை கண்டால் அவற்றை பின் தொடராமல் சிறிது நேரம் அமைதியாக வாகனத்தை நிறுத்தினால், அவைகள் தானாக வனப்பகுதிக்குள் சென்று விடும். அத்துமீறி வனவிலங்குளை விரட்டவோ, துன்புறுத்தவோ கூடாது. மீறினால் வன உயிரின பாதுகாப்பு சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு, கூறினர்.
