/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நடுமலை எஸ்டேட்டில் கரடி நடமாட்டத்தால் பீதி
/
நடுமலை எஸ்டேட்டில் கரடி நடமாட்டத்தால் பீதி
ADDED : ஜன 04, 2024 11:13 PM
வால்பாறை:நடுமலை எஸ்டேட் பகுதியில் கரடி நடமாடுவதால் தொழிலாளர்கள் அச்சத்தில் உள்ளனர்.
ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட, வால்பாறை, மானாம்பள்ளி ஆகிய வனச்சரகங்களில், சமீப காலமாக கரடிகள் நடமாட்டம் அதிகமாக காணப்படுகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளில், கரடி தாக்கி இருவர் உயிரிழந்தனர். 10க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கரடி தாக்கி படுகாயமடைந்தனர்.
இந்நிலையில், வால்பாறை நகரிலிருந்து, 4 கி.மீ., தொலைவில் உள்ள நடுமலை எஸ்டேட் பகுதியில், கடந்த சில நாட்களாக கரடி, சிறுத்தை உள்ளிட்ட வன விலங்குகள் பகல் நேரத்திலேயே ரோட்டில் உலா வருகின்றன. இதனால் தொழிலாளர்கள் தேயிலை பறிக்கும் பணியில் ஈடுபட முடியாமல் தவிக்கின்றனர்.
எஸ்டேட் தொழிலாளர்கள் கூறுகையில், 'நடுமலை எஸ்டேட் பகுதியில், சிறுத்தை தாக்கி இரண்டு குழந்தைகள் இறந்துள்ளனர். இந்நிலையில், இந்த எஸ்டேட் பகுதியில் சிறுத்தை, கரடி உள்ளிட்ட வனவிலங்குகள், பகல் நேரத்திலேயே உலா வருகின்றன.
இதனால், மாலை நேரங்களில் குழந்தைகள் வீட்டிற்கு வெளியே விளையாடக்கூட முடியாத நிலை உள்ளது. அசம்பாவிதம் நடைபெறுவதற்கு முன், சிறுத்தை மற்றும் கரடியை கூண்டு வைத்து பிடிக்க வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.