ADDED : ஜன 30, 2026 05:15 AM

கோவை: கோவை -பாலக்காடு சாலையில், மரப்பாலத்தில் ரயில்வே பாலம் பணிகள் நடந்து வருவதால், வாகனங்கள், குவாரி ஆபிஸ், குரும்பப்பாளையம் ரோடு, மதுக்கரை மார்க்கெட் வழியாக, செட்டிபாளையம் பிரிவுக்கு சென்று, பாலக்காடு ரோடு அடைகிறது. பாலக்காடு பகுதியில் இருந்து வரும் வாகனங்களும், இதே வழியில் செல்கின்றன.
மதுக்கரை மார்க்கெட் மற்றும் செட்டிபாளையம் பிரிவு வரையிலான குறுகிய சாலையில், கேரள பதிவெண் கொண்ட பல பஸ்கள், கார்கள், அதிவேகமாக இயக்கப்படுகின்றன. சாலையோரம், பல குடியிருப்பு பகுதிகளுக்கு நுழைவாயிலாக இருப்பதால், சாலையை கடக்க மக்கள் பயப்படுகின்றனர். சில நாட்களுக்கு முன், பள்ளி குழந்தைகளுடன் சென்ற தனியார் பள்ளி பஸ் மீது, கேரள பஸ் லேசாக மோதியுள்ளது. இது, பெற்றோரிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
பகுதி மக்கள் கூறுகையில், பள்ளி பஸ்கள், இச்சாலை வழியாக அதிகமாக செல்கின்றன. கேரள பஸ்கள், தனியார் பேருந்துகள் அதை கண்டுகொள்ளாமல், அதிவேகமாக செல்கின்றன. அசம்பாவிதம் ஏற்படும் முன், வேகத்தடை அமைக்க வேண்டும்' என்றனர்.
