/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பெற்றோரே உஷார்; விளையாட்டு அலுவலர் எச்சரிக்கை! அங்கீகாரமற்ற விளையாட்டு சங்கங்கள் வழங்கும் சான்றிதழ்களால் பயனில்லை
/
பெற்றோரே உஷார்; விளையாட்டு அலுவலர் எச்சரிக்கை! அங்கீகாரமற்ற விளையாட்டு சங்கங்கள் வழங்கும் சான்றிதழ்களால் பயனில்லை
பெற்றோரே உஷார்; விளையாட்டு அலுவலர் எச்சரிக்கை! அங்கீகாரமற்ற விளையாட்டு சங்கங்கள் வழங்கும் சான்றிதழ்களால் பயனில்லை
பெற்றோரே உஷார்; விளையாட்டு அலுவலர் எச்சரிக்கை! அங்கீகாரமற்ற விளையாட்டு சங்கங்கள் வழங்கும் சான்றிதழ்களால் பயனில்லை
ADDED : மார் 10, 2024 11:26 PM

- நமது நிருபர் -
அங்கீகாரம் இல்லாத விளையாட்டு சங்கங்களால், மாநிலத்தில் பல்வேறு விளையாட்டு வீரர் வீராங்கனைகளின் வாழ்க்கை, கேள்விக்குறியாகி வருகிறது. இந்த சங்கங்கள் சார்பில் வழங்கப்படும், சான்றிதழ்களால் மாணவ மாணவியரின் உயர்கல்வி, வேலை வாய்ப்புக்கு எந்த பயனும் இல்லை என எச்சரிக்கிறார், மாவட்ட விளையாட்டு அலுவலர் அருணா.
தமிழகத்தில் ஒரு குறிப்பிட்ட விளையாட்டை நிர்வகிக்க, ஒரே ஒரு மாநில சங்கத்திற்கு மட்டுமே அங்கீகாரம் வழங்கப்படுகிறது. ஆனால், நமது மாநிலம் மற்றும் மாவட்டத்தில் பல்வேறு விளையாட்டுகளில் இரண்டு, மூன்று சங்கங்கள் செயல்படுகின்றன. இது தவிர, ஒரு சில விளையாட்டுகள் பெயரில், போலி சங்கங்களும் செயல்படுகின்றன.
பல ஆண்டுகளாக இருக்கும், அனைவருக்கும் பரிச்சயமான விளையாட்டுகளுக்கே இரண்டு சங்கங்கள் இருக்கின்றன. நிர்வாக காரணம், சங்கத்திற்குள் ஏற்படும் அரசியல் காரணமாக, பிளவுபட்டு இரு பிரிவுகளாக பிரியும் இவர்கள், தாங்கள் தான் அங்கீகரிக்கப்பட்டசங்கம் என மார்தட்டுகின்றனர். ஆனால், இவர்கள் வழங்கும் சான்றிதழ்கள், வெளியிடங்களில் நிராகரிக்கப்படும்போதுதான் நிஜம் வெளிப்படுகிறது.
கல்லுாரியில் சீட் கிடைக்காது
தற்போது பிரபலமடைந்து வரும், டேக்வாண்டோ, ரோல்பால், கராத்தே, சிலம்பம் போன்ற பல்வேறு விளையாட்டுகளில், அங்கீகாரமே இல்லாத அமைப்புகளால் போட்டிகள் நடத்தப்பட்டு, சான்றிதழ்களும் வழங்கப்படுகின்றன.
சமீப காலமாக, வியாபார நோக்கில் கால்பந்து, டேக்வாண்டோ, சிலம்பம், யோகா, உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
அங்கீகாரம் இல்லாத மாநில, மாவட்ட சங்கங்களால் நடத்தப்படும் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்கள், அந்த சான்றிதழ்களை வைத்துக்கொண்டு பள்ளி, கல்லுாரிகளில் 'ஸ்போர்ட்ஸ் கோட்டா' சீட் பெற முடியாது.
சர்வதேச போட்டியாம்!
பெற்றோர்கள், தங்களின் குழந்தைகளை விளையாட்டில் ஈடுபடுத்த விரும்புவது வரவேற்கத்தக்கதாக இருந்தாலும், முறையாக அங்கீகரிக்கப்பட்ட சங்கங்களின் கீழ் செயல்படும் பயிற்சிக்கூடங்கள், கிளப்கள், அகாடமிகளை தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.
பலருக்கு இது குறித்த விழிப்புணர்வு இல்லாமல், அங்கீகாரம் இல்லாத கிளப், அகாடமிகளில் குழந்தைகளை பயிற்சிக்கு அனுப்புகின்றனர். அங்கிருந்து, சர்வதேச அளவிலான போட்டிகளுக்கு மாணவர்கள் அழைத்து செல்லப்படுகின்றனர். அதற்கு பெற்றோர் பல ஆயிரம் ரூபாய், செலவு செய்ய வேண்டிய நிலை ஏற்படுகிறது. ஆனால் அந்த சான்றிதழுக்கு மதிப்பு இல்லை என்பது, பல பெற்றோர்களுக்கு தெரியாது.
கற்பகம் பல்கலை உடற்கல்வி இயக்குனர் சுதாகர் கூறுகையில், ''மாநில அரசு, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் (எஸ்.டி.ஏ.டி.,) இந்திய விளையாட்டு ஆணையம் (சாய்), இந்தியா பள்ளிகளின் விளையாட்டு குழுமம் (எஸ்.ஜி.எப்.ஐ.,) மற்றும் எஸ்.டி.ஏ.டி., யால் அங்கீகாரம் பெற்ற சங்கங்களால் நடத்தப்படும் போட்டிகளின் சான்றிதழ்கள் மட்டுமே, 'ஸ்போர்ட்ஸ் கோட்டாவில்' மாணவர்கள் ஏற்றுக்கொள்ளப்படுகின்றனர்.
அங்கீகாரம் இல்லாமல், நேரடியாக மாநில, தேசிய போட்டிகளை பலர் நடத்துகின்றனர். அவற்றில் பங்கேற்று வெற்றி பெற்ற சான்றிதழ்களை கொண்டு கல்லுாரி, பல்கலை மற்றும் அரசு பணிகளுக்கு விண்ணப்பிக்க முடியாது,'' என்றார்.
ஆகவே, மாணவ மாணவியரே.... இனி 'விளையாட்டுக்கு' கூட அங்கீகாரமற்ற சங்கங்களில் சேர்ந்து, உங்கள் நேரத்தையும் பணத்தையும் விரயம் ஆக்காதீர்!

