/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'ஜெ.என்-1' கொரோனா பரவல் அதிகரிப்பு; சில வாரங்களில் இயல்புக்கு திரும்பும் என கணிப்பு
/
'ஜெ.என்-1' கொரோனா பரவல் அதிகரிப்பு; சில வாரங்களில் இயல்புக்கு திரும்பும் என கணிப்பு
'ஜெ.என்-1' கொரோனா பரவல் அதிகரிப்பு; சில வாரங்களில் இயல்புக்கு திரும்பும் என கணிப்பு
'ஜெ.என்-1' கொரோனா பரவல் அதிகரிப்பு; சில வாரங்களில் இயல்புக்கு திரும்பும் என கணிப்பு
UPDATED : மே 30, 2025 12:33 AM
ADDED : மே 30, 2025 12:27 AM

கோவை: 'நாட்டில், ஜெ.என்-1 எனும் கொரோனா வைரஸ் பரவல் அதிகளவில் உள்ளது. இது ஓமிக்ரான் வகையில் உருவாகும் துணை வைரஸ். பள்ளிகள் திறக்கவுள்ள சூழலில், பெற்றோர் அச்சம் பதட்டம் கொள்ள தேவையில்லை.
இது ஒரு பருவநிலை சார்ந்த தொற்று அலையாக இருக்கலாம். சில வாரங்களில் இயல்புக்கு திரும்பும் என கணிக்கப்பட்டுள்ளது,'' என இந்திய குழந்தை நல மருத்துவர் சங்கம் தெரிவித்துள்ளது.
கடந்த, 2019-20ம் ஆண்டுகளில் கொரோனா தொற்று பாதிப்பு நம் அனைவரின் வாழ்வையும் புரட்டிபோட்டு சென்றதை அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது. அதே போன்று, புதிய வகை கொரோனா வைரஸ் பரவி வருகிறது. சென்னையில் புதிய வகை கொரோனாவிற்கு முதியவர் ஒருவர் மரணம் அடைந்துள்ளார்.
இதுபோன்ற சூழல்களில், பள்ளிகள் ஜூன் முதல் வாரம் துவங்கவுள்ளன. பெற்றோர் பலர் அச்சத்தில் இருப்பதை காணமுடிகிறது.
இதுகுறித்து, இந்திய குழந்தை நல மருத்துவர் சங்கம் தமிழக பிரிவு தலைவர் ராஜேந்திரன் கூறியதாவது:
நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஜெ.என்-1 எனப்படும் கொரோனா வைரஸ் வேகமாக பரவிவருகிறது. இது ஓமிக்ரான் வகையில் துணை வைரஸ். தற்போது, சளி, இருமல், காய்ச்சல், போன்ற பொதுவான அறிகுறிகளுடன் மருத்துவமனைக்கு வருபவர்கள் எண்ணிக்கை அதிகம் உள்ளது.
தவிர, பெற்றோர் மற்றும் பள்ளி நிர்வாகங்கள் கொரோனா காரணமாக அச்சம் கொண்டு பல்வேறு சந்தேகங்களை கேட்கின்றனர். இவ்வகை வைரஸ் வேகமாக பரவும் தன்மை கொண்டது; ஆனால், பெரும்பாலானோருக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தவில்லை.
சாதாரண காய்ச்சல், இருமல், தொண்டை வலி, மூக்கடைப்பு, சளி, வலிப்பு போன்றவை இதன் அறிகுறிகள். 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், இணை நோய் நீண்டகாலமாக உள்ளவர்கள், நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள் சற்று கூடுதல் கவனத்துடன் இருக்கவேண்டும்.
குழந்தைகள், இளம் வயதினர் பெரும்பாலும் எளிதாக மீண்டுவிடுகின்றனர். இதன் காரணமாக பள்ளிகள் மூடவேண்டிய தேவையில்லை. பெற்றோர் தாராளமாக பள்ளிகளுக்கு அனுப்பலாம். பள்ளிகளில் முன்னெச்சரிக்கை கடைபிடிக்க வேண்டும்.
மாணவர்களுக்கு சுத்தமான கைகழுவும் பழக்கம், சிறந்த காற்றோட்டம், அவசியம் எனில் முககவசம் பயன்படுத்தலாம். நோய் அறிகுறிகள் உள்ள குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதை பெற்றோர் தவிர்க்கவேண்டும்.
இந்தியாவில், ஜெ.என் -1வைரஸ் பாதிப்புக்கு எதிராக எம்.ஆர்.என்.ஏ., வகை பூஸ்டர் டோஸ் கிடைக்கிறது. 60 வயதுக்கு மேற்பட்டோர், உடல் நலக்குறைவு உள்ளோர் இந்த தடுப்பூசி போட்டுக்கொள்வது நல்லது.
இது ஒரு பருவநிலை சார்ந்த தொற்று அலையாக இருக்கலாம்; சில வாரங்களில் இயல்புக்கு திரும்பும் என கணிக்கப்பட்டுள்ளது. நாட்டின் மருத்துவ கட்டமைப்பு இதனை கையாளும் வகையில் உள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.