/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பராமரிப்பு இல்லாத பூங்கா; நகராட்சி நிர்வாகம் சீரமைக்குமா?
/
பராமரிப்பு இல்லாத பூங்கா; நகராட்சி நிர்வாகம் சீரமைக்குமா?
பராமரிப்பு இல்லாத பூங்கா; நகராட்சி நிர்வாகம் சீரமைக்குமா?
பராமரிப்பு இல்லாத பூங்கா; நகராட்சி நிர்வாகம் சீரமைக்குமா?
ADDED : டிச 31, 2024 04:50 AM

சேதமடைந்த ரோடு
பொள்ளாச்சி அரசு கல்லுாரி செல்லும் வழியில், கடந்த சில நாட்களாக ரோடு சேதமடைந்த நிலையில் உள்ளது. இதனால் வாகன ஓட்டுநர்கள் தடுமாற்றம் அடைந்து செல்கின்றனர். எனவே, இப்பகுதி மக்கள் நலன் கருதி இந்த ரோட்டை விரைவில் சீரமைக்க வேண்டும்.
--- மாணிக்கம், பொள்ளாச்சி.
வீணாகும் உபகரணங்கள்
சந்தேகவுண்டம்பாளையத்தில் இருந்து குள்ளிச்செட்டிபாளையம் செல்லும் ரோட்டில் குழந்தைகள் விளையாட்டு உபகரணங்கள் துருப்பிடித்து, குழந்தைகள் விளையாட முடியாத நிலையில் இருக்கிறது. இதை அரசு அதிகாரிகள் கவனித்து முறையாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-- ஹரி, சந்தேகவுண்டம்பாளையம்.
பூங்காவை சுத்தப்படுத்துங்க!
பொள்ளாச்சி, மரபேட்டை வீதியில் உள்ள கந்தசாமி பூங்கா முறையாக பராமரிக்கப்படாததால் அங்கு அதிக அளவு செடி கொடிகள் படர்ந்து புதர் போல் காட்சியளிக்கிறது. இதனால் பூங்காவுக்கு வரும் பயணியர் எண்ணிக்கை குறைகிறது. இதை நகராட்சி நிர்வாகம் கவனித்து உடனடியாக பூங்காவை சீரமைப்பு செய்ய வேண்டும்.
-- நந்தகுமார், பொள்ளாச்சி.
போக்குவரத்து பாதிப்பு
பொள்ளாச்சி அரசு மருத்துவமனை வளாகத்தில், இருசக்கர வாகனங்கள் அனுமதிக்கப்படாததால் நெடுஞ்சாலைத்துறை ரோட்டில் பைக்குகளை நிறுத்துகின்றனர். இதனால், அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதைத் தவிர்க்க மருத்துவமனை வளாகத்தில் பார்க்கிங் ஏரியாவில் பைக் நிறுத்த அனுமதிக்க வேண்டும்.
--- நரிமுருகன், பொள்ளாச்சி.
தகவல் மையம் தேவை
வால்பாறை நகரில், சுற்றுலா பயணியர் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதை முறைப்படுத்தவும், பயணியருக்கு வழி காட்டவும், இப்பகுதியில் சுற்றுலா தகவல் மையம் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
--- வினோத், வால்பாறை.
வாகனங்களால் இடையூறு
பொள்ளாச்சி, வெங்கடேசா காலனி பிரதான ரோட்டில், இருசக்கர வாகனங்கள் ரோட்டின் இருபக்கமும் தாறுமாறாக நிறுத்தப்படுகின்றன. இதனால், பாதசாரிகள் நடந்து செல்ல முடியாத நிலை உள்ளது. மேலும், எதிரெதிராக வாகனங்கள் வரும் போது, போக்குவரத்தும் பாதிக்கிறது.
--- பிரபு, பொள்ளாச்சி.
சிக்னல் அமைக்கணும்!
பொள்ளாச்சியில் கோவை ரோட்டில் இருந்து, மகாலிங்கபுரம் நுழைவுவாயிலில் நுழைவதில் சிக்கல் ஏற்படுகிறது. கோவை ரோட்டில் வரிசை கட்டி வரும் வாகனங்கள், ரோட்டை கடந்து மகாலிங்கபுரம் செல்லும் வாகனங்களுக்கும், கோவை ரோட்டில் இணையும் வாகனங்களுக்கும் வழி விடுவதில்லை. இதை தவிர்க்க, சிக்னல் அமைக்க வேண்டும். அல்லது, போலீசார் அங்கு நின்று, போக்குவரத்தை ஒழுங்குபடுத்த வேண்டும்.
--- கண்ணன், பொள்ளாச்சி.
பூட்டிக்கிடக்கும் கழிப்பிடம்
உடுமலை பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில் உள்ள பெண்கள் கழிப்பறை பூட்டியே கிடக்கிறது. இதனால், அங்கு வரும் பெண்கள் அவசரத்துக்கு பயன்படுத்த முடியாத நிலை ஏற்படுகிறது. எனவே, அதை திறக்க நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- ராணி, உடுமலை.
தெருவிளக்குகள் எரிவதில்லை
உடுமலை, காந்திநகர் இரண்டாவது வீதியில் தெருவிளக்குகள் சரியாக எரியாமல் உள்ளது. இதனால், இரவு நேரங்களில் வாகன ஓட்டுநர்கள் அவ்வழியாக செல்லும்போது அடிக்கடி விபத்துக்குள்ளாகின்றனர். பொதுமக்கள் அதிகாலை மற்றும் மாலையில் நடைபயிற்சி செய்வதற்கும் அச்சப்படுகின்றனர்.
- செல்வி, உடுமலை.
ரோட்டை சீரமைக்கணும்
உடுமலை, அரசு கலைக்கல்லுாரி ரோட்டில் அரசு ஆண்கள் விடுதி அருகே ரோடு பள்ளமாகியுள்ளது. கனரக வாகனங்கள் அவ்வழியாக செல்லும்போது ரோடு மேலும் குழியாகி மழை நாட்களில் மழைநீரும் தேங்குகிறது. இதனால் அவ்வழியாக செல்லும் மாணவர்களும் குழியில் தடுமாறி விபத்துக்குள்ளாகின்றனர்.
- ராஜ்குமார், உடுமலை.
வாகனங்கள் ஆக்கிரமிப்பு
உடுமலை, தளிரோட்டில் வாகனங்கள் விதிமுறை பின்பற்றாமல் ரோட்டை ஆக்கிரமித்து நிறுத்தப்படுகின்றன. இதனால் மற்ற வாகனங்கள் செல்வதற்கு இடையூறு ஏற்படுகிறது. மாலை நேரங்களில் தளி ரோட்டில், விதிமுறை மீறும் வாகனங்களால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. பொதுமக்கள் நடந்து செல்வதற்கும் இடையூறாக உள்ளது.
- பழனிச்சாமி, உடுமலை.
திறந்தவெளியில் குப்பை
உடுமலை, சிவலிங்கம் பிள்ளை லே - அவுட் பகுதியில், குப்பைக்கழிவுகள் திறந்த வெளியில் கொட்டப்படுகிறது. கழிவுகள் தேங்கி மிகுதியான துர்நாற்றத்தை ஏற்படுத்துகிறது. கழிவுகளை எடுப்பதற்கு தெருநாய்களும் அதிக எண்ணிக்கையில் உலா வருவதால், பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.
- வனிதா, உடுமலை.
ஓடையில் கழிவுகள்
உடுமலை - பழநி ரோடு, கழுத்தறுத்தான் பள்ளம் ஓடையில், செடிகள் மற்றும் கழிவுகள் தேங்கிக்கிடக்கிறது. இதனால் துர்நாற்றம் வீசி சுகாதாரகேடு ஏற்படுகிறது. எனவே, இக்கழிவுகளை அகற்ற நகராட்சியினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- கார்த்திக், உடுமலை.