/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
காந்திசிலை பஸ் ஸ்டாண்டில் 'பார்க்கிங்'; அபராதம் விதிக்க மக்கள் கோரிக்கை
/
காந்திசிலை பஸ் ஸ்டாண்டில் 'பார்க்கிங்'; அபராதம் விதிக்க மக்கள் கோரிக்கை
காந்திசிலை பஸ் ஸ்டாண்டில் 'பார்க்கிங்'; அபராதம் விதிக்க மக்கள் கோரிக்கை
காந்திசிலை பஸ் ஸ்டாண்டில் 'பார்க்கிங்'; அபராதம் விதிக்க மக்கள் கோரிக்கை
ADDED : ஆக 11, 2025 08:41 PM

வால்பாறை; வால்பாறை, காந்திசிலை பஸ் ஸ்டாண்டில், அனுமதியின்றி வாகனங்களை நிறுத்தினால் அபராதம் விதிக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வால்பாறை நகரில் இடநெருக்கடியான இடத்தில் காந்திசிலை பஸ் ஸ்டாண்ட் அமைந்துள்ளது. இங்கிருந்து சின்கோனா, ேஷக்கல்முடி, முடீஸ், சோலையாறுடேம் உள்ளிட்ட பல்வேறு எஸ்டேட் பகுதிகளுக்கு பஸ்கள் நிறுத்தம் செய்யப்படுகின்றன.
இந்நிலையில், பஸ் ஸ்டாண்டை சுற்றிலும் ஆட்டோ, இருசக்கர வாகனங்கள் அதிகளவில் நிறுத்தப்படுவதால், எஸ்டேட் பகுதியில் இருந்து வரும் பஸ்கள் பஸ் ஸ்டாண்டிற்குள் நுழைய முடியாத நிலை உள்ளது.
குறிப்பாக, இருசக்கர வாகனங்கள், டூரிஸ்ட் வேன்கள் விதிமுறை மீறி பஸ் ஸ்டாண்டில் நிறுத்தப்படுவதால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, பயணியர் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
பொதுமக்கள் கூறியதாவது: எஸ்டேட் பகுதிகளுக்கு செல்லும் பெரும்பாலான பஸ்கள், காந்திசிலை பஸ் ஸ்டாண்டில் இருந்து இயக்கப்படுகின்றன. ஆனால், பஸ் ஸ்டாண்ட் வளாகத்தை சுற்றிலும் ஆக்கிரமிப்புக்கள் அதிகளவில் உள்ளன.
பயணியர் நிற்க போதிய இடவசதி இல்லாத நிலையில், நடுரோட்டில் பஸ்சிற்காக காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. எனவே, காந்தி சிலை வளாகத்தில் இடையூறு இல்லாமல் மக்கள் வந்து செல்லும் வகையில், வாகனங்கள் நிறுத்தப்படுவதை போலீசார் தடுக்க வேண்டும்.
மேலும், போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்கள் நிறுத்தப்படுவதை கட்டுபடுத்த போலீசார், அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, கூறினர்.
போலீசார் கூறுகையில்,'காந்திசிலை பஸ் ஸ்டாண்ட் பகுதியில் போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்படாத வகையில், சுற்றுலா வாகனங்களும், உள்ளூர் வாகனங்களும் நிறுத்த வேண்டும். போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்கள் நிறுத்தப்பட்டால் அபராதம் விதிக்கப்படும்,' என்றனர்.