/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பள்ளி முன்பாக 'பார்க்கிங்'; மாணவர்கள் பரிதவிப்பு
/
பள்ளி முன்பாக 'பார்க்கிங்'; மாணவர்கள் பரிதவிப்பு
ADDED : ஆக 03, 2025 09:08 PM
வால்பாறை; வால்பாறை காந்திசிலை பஸ் ஸ்டாண்டின் அருகில், அரசு மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இப்பள்ளியில், 854 மாணவர்கள் படிக்கின்றனர். இந்நிலையில் பஸ் ஸ்டாண்ட் அருகில் பள்ளி இருப்பதால், சாலையோரங்களில் அதிகளவில் வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன.
குறிப்பாக, பள்ளி நுழைவு வாயிலின் முன்பாக வாகனங்கள் நிறுத்தப்படுவதால், மாணவர்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். கேட் முன்பாக வாகனங்கள் நிறுத்தக்கூடாது என அறிவிப்பு வெளியிட்டிருந்தும், அதை கண்டு கொள்ளாமல் வாகனங்கள் நிறுத்தப்படுவதால், ஆசிரியர்கள், மாணவர்கள் அவதிக்குள்ளாகின்றனர்.
ஆசிரியர்கள் கூறுகையில், 'பள்ளி நுழைவுவாயிலின் முன்பாக வாகனங்கள் நிறுத்தக்கூடாது என பல முறை தெரிவித்தும், விதிமுறையை மீறி வாகனங்கள் நிறுத்துகின்றனர். பள்ளி நேரத்தில் மாணவர்களுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டால், ஆம்புலன்ஸ் கூட வரமுடியாத அளவுக்கு வாகனங்களை நிறுத்துகின்றனர்.
மேலும், பள்ளி ஆய்வுக்காக வரும் கல்வி அதிகாரிகள், இதனால் சிரமத்துக்கு உள்ளாகின்றனர். பள்ளி நுழைவுவாயிலை அடைத்து வாகனங்கள் நிறுத்துவதை தடுக்க போலீசார் நிரந்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.