ADDED : மே 08, 2025 12:50 AM
குடியிருப்பு பகுதிகள் உருவாக்கும் போது, சுற்றுச்சூழலையும், இயற்கையையும் சமநிலைப்படுத்த பூங்காக்களுக்கு இடம் ஒதுக்கப்பட்டு, உள்ளாட்சிகள் வசம் ஒப்படைக்கப்படுகிறது.
பொள்ளாச்சி பகுதிகளில், பொதுமக்களுக்கு பொழுதுபோக்கு அம்சங்கள் இல்லாத சூழலில், குடியிருப்பு பகுதிகளில் பூங்காக்கள் மட்டுமே உள்ளன.
நகராட்சியில் மொத்தம் உள்ள, 36 வார்டுகளில், 141 பூங்கா இடங்கள் உள்ளன. அதில், ஜோதிநகர் பூங்கா, மகாலிங்கபுரம் சிறுவர் பூங்கா என, 20 பூங்காக்கள் மட்டுமே பயன்பாட்டில் உள்ளன.
பேரூராட்சிகளில், இரண்டு அல்லது மூன்று பூங்காக்கள் உள்ளன.வடக்கு ஒன்றியத்தில், மொத்தம், 10 பூங்காக்கள் உள்ளன. அதில், நான்கு பூங்காக்கள் பயன்பாட்டில் உள்ளன. ஆறு பூங்காக்கள் பயன்பாடின்றி உள்ளன. ஒன்றியங்களில் பூங்காவுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் விளையாட்டு திடல்கள் போதிய பராமரிப்பின்றி உள்ளன.
விளையாட்டு உபகரணங்கள் சிதிலமடைந்து, குழந்தைகள் விளையாட முடியாத சூழல் உள்ளது. பல இடங்களில், பூங்கா இடங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், அரசு ஒதுக்கிய நிதியை கொண்டு அமைக்கப்படும் பூங்காக்களும், சில மாத காலமே பராமரிக்கப்படுகின்றன. அங்குள்ள பொருட்கள் மாயமாவதுடன், உபகரணங்கள் பராமரிப்பின்றி வீணாகிறது. சமூக விரோத செயல்களின் கூடாரமாகவும் பூங்காக்கள் மாறி விடுகின்றன.
தி.மு.க., - அ.தி.மு.க., ஆட்சிக்கு வரும் போதெல்லாம், ஊராட்சிகளில் பூங்காவுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில், பூங்காவுடன் விளையாட்டு திடல்கள் அமைக்கப்படுகிறது. ஆட்சி மாற்றம் ஏற்பட்டால், அவை பராமரிப்பின்றி கிடப்பதும், புதிய இடத்தில் விளையாட்டு திடல் அமைப்பதும் வழக்கமாகி விட்டது.
தன்னார்வ அமைப்புகளுடன் இணைந்து, பராமரிப்பில்லாத பூங்காக்களையும், பல லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட உடற்பயிற்சி கூடங்களையும் புதுப்பித்து, மக்கள் பயன்பாட்டுக்கு விடவும், காலியிடமாக உள்ள பகுதியில் பூங்காக்கள் அமைக்கவும் அதிகாரிகள் முன்வர வேண்டும்.
உள்ளாட்சி அதிகாரிகள் கூறுகையில், 'பராமரிப்புக்காக ஒன்றிய, நகர, பேரூராட்சிகளில் தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டு நிதி ஒதுக்கப்படுகின்றன. புதியதாக புனரமைத்து பூங்கா அமைக்க வேண்டுமென்றால் அரசிடம் இருந்து நிதி பெறலாம். பூங்கா பராமரிப்பு பணிகளுக்கு பொது நிதியே செலவிடப்படுகிறது,' என்றனர்.
இடமிருக்கு... பூங்காக்கள் இல்லை!
கிணத்துக்கடவு, நெகமம் பேரூராட்சி பகுதிகளில் தலா 2 பூங்காக்கள் உள்ளன. கிணத்துக்கடவு ஒன்றியத்தில், 145 பூங்கா சைட்டுகள் உள்ளன. இதில், பூங்காவுக்கு ஒதுக்கப்பட்ட சைட்கள் புதர் சூழ்ந்து உள்ளன.
ஒன்றியத்தில் கோவில்பாளையம், தேவனாம்பாளையம், வடபுதூர் மற்றும் கொண்டம்பட்டி ஆகிய நான்கு ஊராட்சிகளில் விளையாட்டு திடலுடன் கூடிய பூங்கா உள்ளது. இதில், தேவனாம்பாளையம் ஊராட்சியில் உள்ள பூங்காவில், விளையாட்டு உபகரணங்கள் தனித்தனியாக கழட்டி வைக்கப்பட்டுள்ளது.
ஊராட்சி நிர்வாகத்திடம் கேட்ட போது, 'பள்ளி மாணவர்கள் வாலிபால் விளையாட பூங்காவின் ஒரு பகுதியை கேட்டுள்ளனர். இதற்காக அங்கிருந்த விளையாட்டு உபகரணங்கள் கழற்றப்பட்டு உள்ளன. வாலிபால் மைதானம் அமைக்கப்பட்ட பின், மீதம் இருக்கும் இடத்தில் விளையாட்டு உபகரணங்கள் அமைக்கப்படும்,' என்றனர்.