/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பர்லியாறில் பஸ்கள் நிற்காததால் பயணிகள் அவதி
/
பர்லியாறில் பஸ்கள் நிற்காததால் பயணிகள் அவதி
ADDED : டிச 03, 2024 09:06 PM
மேட்டுப்பாளையம்; மேட்டுப்பாளையம் ஊட்டி ரோட்டில் பர்லியாறு பகுதியில் பல அரசு பஸ்கள் நிற்காமல் செல்வதால், பயணிகள் இயற்கை உபாதைகள் கழிக்க முடியாமல் கடும் அவதியடைந்து வருகின்றனர்.
மேட்டுப்பாளையம் ஊட்டி ரோட்டில் இருந்து குன்னூர் செல்லும் வழியில் பர்லியாறு உள்ளது. அரசு போக்குவரத்து கழகம் கோவை கோட்டத்தில் இருந்து கோவை, திருப்பூர், ஈரோடு, மாவட்டங்களில் இருந்து ஊட்டி, குன்னுார், கோத்தகிரி உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு தினமும் பஸ்கள் இயக்கப்படுகின்றன.
ஊட்டி, குன்னுாரில் இருந்து மேட்டுப்பாளையம் மார்க்கமாக வரும் அரசு பஸ்களும், மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னுார் வழியாக ஊட்டி மார்க்கமாக செல்லும் அரசு பஸ்களும் பர்லியாறு பகுதியை கடந்து செல்கின்றன. மலைப் பாதையில் பயணிக்கும் இந்த அரசு பஸ்கள், பயணிகள் இயற்கை உபாதைகள் கழிக்க, டீ, காபி பருக பல ஆண்டுகளாக பர்லியாறு பகுதியில் நிறுத்தி செல்லப்படுகிறது.
கடந்த சில நாட்களாக 80 சதவீத அரசு பஸ்கள் பர்லியாறு பகுதியில் நிற்காமல் செல்கின்றன. இதனால் பயணிகள் இயற்கை உபாதைகள் கழிக்க முடியாமல் கடும் அவதியடைந்து வருகின்றனர். மேலும் பர்லியாறு பகுதியில் வியாபாரம் இன்றி கடைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன.
இதுகுறித்து, அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறுகையில், ''அரசு பஸ்கள் பர்லியாறு பகுதியில் நின்று தான் செல்கின்றன. நிற்காமல் செல்லும் பஸ்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றனர்.