/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
படிக்கட்டில் தொங்கல் பயணம்; பயணிகள் அவதி
/
படிக்கட்டில் தொங்கல் பயணம்; பயணிகள் அவதி
ADDED : செப் 05, 2025 10:09 PM

கருமத்தம்பட்டி:
கருமத்தம்பட்டி வழியே கோவை செல்ல போதிய பஸ்கள் இல்லாததால், படிக்கட்டில் தொங்கியபடி பயணிகள் அச்சத்துடன் பயணிக்கின்றனர்.
கோவை அவிநாசி ரோட்டில் கருமத்தம்பட்டி உள்ளது. சுற்று வட்டாரத்தில், சோமனூர், சாமளாபுரம், வாகராயம்பாளையம், கணியூர் உள்ளிட்ட பெரிய ஊர்கள் உள்ளன.
இங்குள்ள மக்கள், வேலை, படிப்பு, மருத்துவம் உள்ளிட்ட அனைத்து அத்தியாவசிய தேவைகளுக்கும் கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட நகரங்களுக்கு தினமும் சென்று வருகின்றனர்.
இதனால், கருமத்தம்பட்டி பஸ் ஸ்டாப்பில் எந்நேரமும் பயணிகள் கூட்டம் அதிகம் இருக்கும். காலை, மாலை நேரத்தில் மேலும் கூட்டம் அதிகமாக இருக்கும். அந்நேரங்களில் போதிய பஸ்கள் இல்லாததால், பயணிகள் அன்றாடம் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதுகுறித்து பயணிகள் கூறியதாவது:
பஸ் ஸ்டாப்பில் கால் கடுக்க நின்றாலும், திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வரும் அனைத்து பஸ்களிலும் கூட்டம் நிரம்பி வழியும். காலை, மாலை நேரங்களில் பஸ் படிக்கட்டுகளில் தொங்கியபடி தான் பயணிக்க வேண்டி உள்ளது.
இதனால், குழந்தைகளுடன் வரும் பெண்கள், கர்ப்பிணிகள், முதியவர்கள் பஸ்சில் ஏற முடியாமல் தவிக்கும் நிலை உள்ளது. கருமத்தம்பட்டி வழியே கூடுதல் பஸ்கள் இல்லாததால் இந்த நிலை உள்ளது. காலை, மாலை நேரங்களிலாவது கூடுதல் பஸ்களை இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.