/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தேசிய நெடுஞ்சாலையில் பெயரளவில் 'பேட்ச் ஒர்க்'; வாகன ஓட்டுநர்கள் திணறல்
/
தேசிய நெடுஞ்சாலையில் பெயரளவில் 'பேட்ச் ஒர்க்'; வாகன ஓட்டுநர்கள் திணறல்
தேசிய நெடுஞ்சாலையில் பெயரளவில் 'பேட்ச் ஒர்க்'; வாகன ஓட்டுநர்கள் திணறல்
தேசிய நெடுஞ்சாலையில் பெயரளவில் 'பேட்ச் ஒர்க்'; வாகன ஓட்டுநர்கள் திணறல்
ADDED : ஜூன் 16, 2025 08:25 PM

பொள்ளாச்சி; பொள்ளாச்சியில் இருந்து, ஊஞ்சவேலம்பட்டி வரையிலான தேசிய நெடுஞ்சாலையில், பெயரளவில் மட்டுமே 'பேட்ச் ஒர்க்' செய்யப்பட்டுள்ளதால், வாகனங்கள் விபத்தில் சிக்குகின்றன.
பொள்ளாச்சி அருகே, மரப்பேட்டை முதல் ஊஞ்சவேலாம்பட்டி வரையிலான தேசிய நெடுஞ்சாலை, 4.5 கி.மீ., துாரம் உள்ளது. இந்த சாலையில், போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துக்களை தடுக்க, சென்டர்மீடியன், சர்வீஸ் ரோடு அமைக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில், பெய்த மழையினால், நான்கு வழிச்சாலை உருக்குலைந்து ஜல்லிக்கற்கள் பெயர்ந்து ஆங்காங்கே பெரும் பள்ளங்கள் ஏற்பட்டது. இரவில், பள்ளங்களை அடையாளம் காண முடியாமல் வாகன ஓட்டுநர்கள் பரிதவித்து வருகின்றனர். இரு சக்கர வாகன ஓட்டுநர்கள், ரோட்டில் உள்ள பள்ளங்களால் தடுமாறி விழுந்து காயமடையும் சம்பவம் அடிக்கடி நடக்கிறது. விபத்தை தடுக்கும் விதமாக சாலையை புதுப்பிக்க நெடுஞ்சாலைத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.
இது குறித்து, 'தினமலர்' நாளிதழில், கடந்த வாரம் செய்தியும் வெளியானது. இதையடுத்து, அந்த ரோட்டில் 'பேட்ச் ஒர்க்' செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டது. ஒரு புறம் மட்டும் பெயரளவில், 'பேட்ச் ஒர்க்' செய்து, அப்பணியும் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால், இரு தினங்களாக பெய்யும் மழைக்கு தாக்குப்பிடிக்காமல் ஜல்லிக்கற்கள் பெயர்ந்து வருவதால், வாகன ஓட்டுநர்கள் திணறி வருகின்றனர்.
சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:
இந்த ரோட்டை சீரமைக்க, முன்னாள் எம்.பி., தலைமையில் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது, வெறும் கண்துடைப்பாகும். ஒவ்வொரு முறை நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தினாலும், விமோசனம் கிடைப்பதில்லை.
ரோட்டில் ஆங்காங்கே இருந்த சிறு, சிறு பள்ளங்களை சீரமைக்காததால், மழையால் அவை பெரிய பள்ளங்களாக மாறியுள்ளது. இவற்றில் மழை நீர் நிரம்பினாலும் அடையாளம் காண முடியாது.
இரவில் அதிவேகமாக வாகனங்களில் செல்வோர், திடீரென பள்ளங்களைக் காண்டு, வேகத்தை குறைக்க முற்பட்டாலோ, திசை திருப்ப முயன்றாலோ விபத்து ஏற்படுகிறது. மேலும், சின்னாம்பாளையம், மின்நகர் உள்ளிட்ட பகுதிகளில் எதிர்திசைகளில், வாகனங்கள் இயக்கப்படுவதாலும் விபத்து ஏற்படுகிறது.
இவ்வாறு, கூறினர்.