/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சூர்யா நகரில் ரயில்வே கேட் மேம்பாலம்: தீர்மானம் நிறைவேற்ற மக்கள் முறையீடு
/
சூர்யா நகரில் ரயில்வே கேட் மேம்பாலம்: தீர்மானம் நிறைவேற்ற மக்கள் முறையீடு
சூர்யா நகரில் ரயில்வே கேட் மேம்பாலம்: தீர்மானம் நிறைவேற்ற மக்கள் முறையீடு
சூர்யா நகரில் ரயில்வே கேட் மேம்பாலம்: தீர்மானம் நிறைவேற்ற மக்கள் முறையீடு
ADDED : அக் 16, 2025 08:52 PM

கோவை: கோவை மாநகராட்சி, 56வது வார்டு சூர்யா நகரில் ரயில்வே கேட்டை கடக்க, அ.தி.மு.க. ஆட்சியில் மேம்பாலம் கட்டுவதற்கு 26 கோடியே 70 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டது. மேம்பாலம் கட்டுவதற்கு நிலம் கையகப்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டதால், அந்நிதியை பயன்படுத்தாமல் திருப்பி அனுப்பி விட்டனர். 2023ல் அதற்கான அரசாணையும் ரத்து செய்யப்பட்டது.
சூர்யா நகரை சுற்றி சிவலிங்கபுரம், ஸ்ரீகாமாட்சி நகர், சக்தி நகர், கோமதி நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் உள்ளன. தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் ரயில்வே கேட் பகுதியை கடந்து செல்கின்றனர்.
ரயில் கடக்கும் சமயத்தில் கேட் மூடும் போது, ரோட்டின் இருபுறமும் வாகனங்கள், 15 நிமிடங்கள் வரை காத்திருக்கின்றன. நாளொன்றுக்கும், 20க்கும் மேற்பட்ட தடவை கேட் மூடப்படுகிறது; மாற்றுப்பாதை இல்லை. கேட் திறந்ததும் வாகன போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. இப்பிரச்னைக்கு தீர்வு காண மேம்பாலம் கட்ட வேண்டுமென அப்பகுதியினர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
குடியிருப்போர் நலச்சங்கத்தினர் பல கட்டமாக போராட்டம் நடத்தி விட்டனர். முதல்வர் ஸ்டாலின், எம்.பி., கனிமொழி கோவை வந்திருந்த போது, மனு கொடுத்தனர். கலெக்டரை சந்தித்தும் முறையிட்டனர். லோக்சபா தேர்தல் சமயத்தில், இப்பகுதியினரை சந்தித்த தமிழக தொழில்துறை அமைச்சர் ராஜா, மேம்பாலம் கட்டித் தருவதாக உறுதியளித்தார். இன்று வரை எவ்வித நடவடிக்கையும் இல்லாததால், அப்பகுதியினர் அதிருப்தியில் உள்ளனர்.
இச்சூழலில், 56 மற்றும் 57வது வார்டுக்கான உங்களுடன் ஸ்டாலின் முகாம் ஒண்டிப்புதுாரில் நேற்று நடந்தது. குடியிருப்போர் நலச்சங்கத்தினர், சூர்யா நகர் ரயில்வே கேட் அருகே ஒன்று கூடி, ஊர்வலமாக முகாம் நடந்த இடத்துக்குச் சென்றனர். அவர்களை மேயர் ரங்கநாயகி மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் சந்தித்து, கோரிக்கை மனுவை பெற்றுக் கொண்டனர். அப்போது, 'சூர்யா நகர் ரயில்வே கேட் பகுதியில் மேம்பாலம் கட்ட வேண்டியது அவசியம். சட்டசபை கூட்டத்தொடரில் இக்கோரிக்கை குறித்து பேசுவதாக, சிங்காநல்லுார் எம்.எல்.ஏ. ஜெயராம் உறுதியளித்துள்ளார். அதேபோல், மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி, தமிழக அரசின் கவனத்துக்கு கொண்டு சென்று, மீண்டும் நிதி ஒதுக்கி, திட்டத்தை செயல்படுத்த வேண்டும். போக்குவரத்து பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும்' என, மக்கள் முறையிட்டனர்.
அதற்கு, உரிய நடவடிக்கை எடுப்பதாக, மேயர் உறுதியளித்தார்.