/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மக்கள் கூடும் பொது இடங்களில்... ஊதித்தள்ளுறாங்க! தடுக்காமல் அதிகாரிகள் வேடிக்கை
/
மக்கள் கூடும் பொது இடங்களில்... ஊதித்தள்ளுறாங்க! தடுக்காமல் அதிகாரிகள் வேடிக்கை
மக்கள் கூடும் பொது இடங்களில்... ஊதித்தள்ளுறாங்க! தடுக்காமல் அதிகாரிகள் வேடிக்கை
மக்கள் கூடும் பொது இடங்களில்... ஊதித்தள்ளுறாங்க! தடுக்காமல் அதிகாரிகள் வேடிக்கை
ADDED : நவ 11, 2025 01:06 AM

கோவை:தடை செய்யப்பட்ட புகையிலை விற்பனை மற்றும் நுகர்வை கட்டுப்படுத்துவதில் பல்வேறு துறைகளின் ஈடுபாடும், வழிகாட்டுதலும் குறைவாக இருப்பதால், அரசு தடுமாறி வருகிறது. பொது இடங்களில் புகைப்பதை தடுக்க வேண்டியதே, அரசு செய்ய வேண்டிய முதல் வேலை.
பீளமேடு பகுதியில் உள்ள ஒரு பள்ளியில், கடந்த வாரம் உடற்கல்வி பாடவேளையின் போது, மைதானத்தின் ஒரு பகுதியில், ஏழாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் சிலர், 'கூல் லிப்' பயன்படுத்தியதை, பெற்றோர் சிலர் பார்த்து எச்சரித்து அனுப்பினர்.
இதுபோன்று, மாநிலம் முழுவதும் பள்ளி, கல்லுாரிகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள், எளிதாக கிடைக்கும் நிலை உள்ளது.
புகையிலை விற்பனை, நுகர்வை கட்டுப்படுத்துவதில் போலீஸ், சுகாதாரத்துறை, மாவட்ட புகையிலை கட்டுப்பாட்டு மையம், உணவு பாதுகாப்புத்துறை, வருவாய்த்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் சரியான வழிகாட்டுதல்கள், ஒருங்கிணைப்பு இன்றி செயல்படுவதே, கட்டுப்படுத்த முடியாததற்கு, முக்கிய காரணம்.
விழிப்புணர்வு நிகழ்வுகள், உறுதிமொழி, பலகைகள் வைப்பதால் மட்டும் இதனை கட்டுப்படுத்த இயலாது என்பதை, இதன் நுகர்வு நாளுக்கு நாள் மாணவர்கள், இளைஞர்கள் மத்தியில் அதிகரித்து வருவதில் இருந்து தெரிகிறது.
மாநில சுகாதாரத்துறை இயக்குனர் சோமசுந்தரம் கூறுகையில், ''அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து 'கோட்பா' சட்ட வழிகாட்டு நெறிமுறைப்படிதான் அறிவுறுத்தல்கள் வழங்கி வருகிறோம். சில சவால்கள் உள்ளன. அதை சரிசெய்து கொண்டே வருகிறோம். பொது இடங்களில் புகைப்பிடிப்பவர்களுக்கு அபராதம் விதிப்பது, கடைகளுக்கு சீல் வைப்பது என தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறோம். 2003ல் சட்டம் போடும் போது இருந்த நிலை, தற்போது முற்றிலும் மாறியுள்ளது. 100 சதவீத கட்டுப்பாடு என்ற இலக்கை நோக்கி, தொடர்ந்து நகர்ந்துகொண்டு இருக்கிறோம்,'' என்றார்.
அருகில் இருப்பவர்களை பொருட்படுத்தாமல், பொது இடங்களில் 'ஊதித்தள்ளுவோரை' பார்க்கும்போது, அப்படி தெரியவில்லையே!
4.11 லட்சம் கிலோ
புகையிலை
பொருட்கள் பறிமுதல்
தமிழக சுகாதாரத்துறை புள்ளிவிபரங்களின் படி, 2023 நவ. முதல் 2025 ஜூன் வரை, உணவு பாதுகாப்புத்துறை ஆய்வுகளின் கீழ், 5,258 கிலோ கூல்லிப் உட்பட, சுமார், 1.78 லட்சம் கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. 18 ஆயிரத்து 400 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டன. போலீசாரால் 4.11 லட்சம் கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு 43,167 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
7ம் வகுப்பு மாணவன்
கூட
போதைக்கு அடிமை
கோவை அரசு பள்ளி தலைமையாசிரியர் ஒருவர் கூறுகையில், ' தேசிய புகையிலை கட்டுப்பாட்டு திட்ட அறிக்கையின் படி இந்தியாவில், 15 வயதுக்கு மேற்பட்டவர்களில், 29 சதவீதம் பேர் புகையிலை பொருட்களை பயன்படுத்துகின்றனர். புகையிலை பயன்பாடு காரணமாக ஆண்டுதோறும் இந்தியாவில், 13 லட்சம் பேர் பல்வேறு பாதிப்புகளால் இறக்கின்றனர். தற்போது, ஏழாம் வகுப்பு மாணவர்கள் கூட இதுபோன்ற பழக்கங்களை எளிதில் கற்றுக்கொள்கின்றனர். புகையிலை மற்றும் போதைப்பொருள் நுகர்வு, விற்பனைக்கு எதிராக கடுமையான சட்ட விதிமுறைகளை வகுக்க வேண்டும். ஆண்டுக்கு ஒரு முறை புகையிலை தடை நீட்டிப்பதால் மட்டும் பயன் இல்லை. எதிர்கால சமூகம் சீரழிவதை பார்த்து, எங்களால் ஒன்றும் செய்ய இயலவில்லை. புகையிலை, போதைப்பொருள் நுகர்வை கட்டுப்படுத்த, அதிகாரமிக்க ஒரு பிரத்யேக துறையை ஏற்படுத்துவதே சிறந்த தீர்வாக அமையும் ' என்றார்.

