வி.ஏ.ஓ-க்கள் காத்திருப்பு போராட்டம் பணிகள் முடங்கியதால் மக்கள் தவிப்பு
வி.ஏ.ஓ-க்கள் காத்திருப்பு போராட்டம் பணிகள் முடங்கியதால் மக்கள் தவிப்பு
ADDED : ஜன 30, 2026 05:29 AM

கோவை : 'தி.மு.க அரசு நிதி சார்ந்த கோரிக்கைகளை மட்டுமின்றி, நிதிச் சுமை இல்லாத கோரிக்கைகளைக் கூட நிறைவேற்றாமல் இழுத்தடித்து வருகிறது' என்று கிராம நிர்வாக அலுவலர்கள் (வி.ஏ.ஓ.) குமுறுகின்றனர். 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நடக்கும் காத்திருப்பு போராட்டத்தால், வருவாய்த்துறை பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.
வி.ஏ.ஓ. அலுவலகங்களில் கழிப்பறை, குடிநீர் மற்றும் இணைய வசதியுடன் கூடிய நவீனக் கட்டமைப்பு வசதிகளை செய்து தர வேண்டும்; 10 ஆண்டு பணி முடித்தவர்களுக்கு 'தேர்வு நிலை கிராம நிர்வாக அலுவலர்' என்றும், 20 ஆண்டு பணி முடித்தவர்களுக்கு 'சிறப்பு நிலை நிர்வாக அலுவலர்' என்றும் பதவி உயர்வு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
முன்னதாக, தாலுகா அலுவலகம் சப் கலெக்டர் மற்றும் கலெக்டர் அலுவலகங்கள் முன்பு கோவையில் அடையாள காத்திருப்பு போராட்டங்கள் நடத்தப்பட்டன. இதன் தொடர்ச்சியாக, தற்போது சென்னையிலும் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தினர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சங்க நிர்வாகிகள் கூறுகையில், 'பதவி உயர்வு சதவீதத்தை 30-லிருந்து 50-ஆக உயர்த்தி, கால வரம்பை 6 ஆண்டுகளிலிருந்து 3 ஆண்டுகளாகக் குறைக்க வேண்டும். வி.ஏ.ஓ., பணிக்கான கல்வித் தகுதியை உயர்த்துவதோடு, அதற்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். நகர்ப்புற நில ஆவணங்களை ஒப்படைக்க உத்தரவிட்டும் ஓராண்டாகியும் நடைமுறைக்கு வரவில்லை. பல ஆண்டுகளாக போராடியும் அரசு எங்கள் கோரிக்கையை அரசு கண்டுகொள்ளவில்லை,' என்றனர்.
மக்கள் பாதிப்பு
வி.ஏ.ஓ-க்களின் போராட்டத்தால் கோவை உட்பட பல்வேறு மாவட்டங்களில் வருவாய்த்துறை ஆவணங்கள் பராமரிப்பு, நிலவரி வசூல், சாதி மற்றும் வருமானச் சான்றிதழ், பட்டா பெயர் மாற்றம் போன்ற முக்கிய பணிகள் முடங்கியுள்ளன. மக்கள் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.
