செம்மொழி பூங்காவில் மக்கள் ஏமாற்றம்: அடிப்படை வசதிகள் பத்தாது
செம்மொழி பூங்காவில் மக்கள் ஏமாற்றம்: அடிப்படை வசதிகள் பத்தாது
UPDATED : ஜன 19, 2026 03:41 PM
ADDED : ஜன 19, 2026 05:12 AM

கோவை: பல கோடி ரூபாய் செலவில் ஏற்படுத்தப்பட்ட செம்மொழி பூங்காவில், பார்வையாளர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் போதிய அளவில் இல்லை. இது பொதுமக்கள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
காந்திபுரத்தில், 45 ஏக்கர் பரப்பில், ரூ.208 கோடி மதிப்பில், செம்மொழிப்பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. கொடுக்கப்பட்ட 'பில்டப்' களால், செம்மொழிப் பூங்காவுக்கு வார நாட்களில், 15 ஆயிரத்துக்கு அதிகமானோர், வார இறுதி நாட்கள், விடுமுறைக ளில், எண்ணிக்கை, 25 ஆயிரத்தை தாண்டுகிறது. நுழைவுக்கட்டணம் ரூ.15 வசூலிக்கப்படுகிறது. ஆனால் கட்டணத்துக்கு ஏற்ற வசதிகள் இருக்கின்றனவா, பார்த்து ரசிக்க பொழுதுபோக்கு அம்சங்கள் உள்ளனவா என்றால், இல்லை என்கின்றனர் பொதுமக்கள்.
திசைக்கு ஒன்றாய் கழிப்பிடங்கள்
பல ஆயிரம் பேர் வருகை தரும் பூங்காவில், திசைக்கு ஒன்றாய் இரு கழிப்பிடங்கள் மட்டுமே உள்ளன. ஒன்று குழந்தைகள் விளையாடும் பகுதியிலும், மற்றொன்று உணவகம் அருகில், இருக்கும் இடம் தெரியாமலும் உள்ளன.
பொதுமக்கள் பூங்காவின் ஒரு பகுதிக்கு வந்து விட்டால், அதன்பின், அவசரத்துக்கு கழிப்பறைகளை தேடும் நிலையே உள்ளது. குறிப்பாக, நடைபயிற்சிக்காக வருவோர் அவசரத்துக்கு கழிப்பறைக்கு செல்ல முடியாது. இருக்கும் கழிப்பிடங்களும் குறிப்பிட்ட இடைவெளியில் சுத்தம் செய்யப்படாததால், துர்நாற்றம் குமட்ட வைக்கிறது.
இருக்கு... ஆனால் இல்லை
பூங்காவில், மொத்தம், ஆறு இடங்களில் குடிநீர் வழங்கும் அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இவை தவிர, நான்கு இடங்களில், குடிநீர் எந்திரங்கள் உள்ளன. குடிநீர் வழங்கும் எந்திரங்களில் ஐந்து மட்டுமே செயல்படுகின்றன. இவையும், திசைக்கு ஒன்றாய் இருப்பதால் பொதுமக்கள் வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. குடிநீர் எந்திரங்களின் நிலையோ பரிதாபமாக உள்ளது. நான்கு எந்திரங்களில் இரண்டு மட்டுமே செயல்படுகிறது.
பொழுதுபோக்கு அம்சங்கள் போதாது
கோவை வ.உ.சி., பூங்காவை சற்று பெரிய சைஸில் ஏற்படுத்தியது போலவே, செம்மொழி பூங்கா உள்ளது.
இதில் குழந்தைகளை கவரும் வகையில் கூடுதலாக பொழுதுபோக்கு அம்சங்களை ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
அத்துடன் குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட பொதுமக்களின் முக்கிய தேவைகளை இப்போதே பூர்த்தி செய்தால் மட்டுமே, செம்மொழி பூங்காவுக்கு மக்கள் வரத்து தொடர்ந்து இருக்கும். இல்லையெனில், 45 ஏக்கரில் கொட்டிய ரூ.208 கோடி வீணாகி விடும்.
