ADDED : அக் 08, 2024 11:58 PM
அன்னுார் : தேசிய பரவலாக்கல் திட்டத்தில், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் வாயிலாக, எம்.பி., தொகுதி மேம்பாட்டு நிதியில், 15 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டு, குருக்கிளையம்பாளையத்தில், 2 லட்சத்து 50 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட நீர் தேக்க தொட்டி 2013ம் ஆண்டு கட்டப்பட்டது.
இங்கிருந்து நீர் உந்தப்பட்டு காரே கவுண்டம்பாளையம், கரியாம்பாளையம் ஊராட்சிகளுக்கு சப்ளை ஆகி வந்தது. இந்நிலையில், கடந்த ஆண்டு 708 குடியிருப்புகளுக்கான குடிநீர் திட்டத்தின் கீழ், கெம்பநாயக்கன் பாளையத்தில் குடிநீர் தொட்டி கட்டப்பட்டது.
அங்கிருந்து, காரேகவுண்டம் பாளையம், கரியாம்பாளையம் ஊராட்சிக்கு குடிநீர் வழங்கப்படுகிறது. இதனால், காரே கவுண்டன் பாளையம் ஊராட்சியில் பல பகுதிகளுக்கு எட்டு நாட்களுக்கு ஒரு முறை தான் குடிநீர் வருகிறது.
கெம்பநாயக்கன்பாளையத்தில் நீருந்து நிலையம், அமைத்ததால் குருக்களையம் பாளையத்தில் உள்ள நீர் தேக்க தொட்டி பயன்படுத்தப்படாமல் பல மாதங்களாக முடங்கி உள்ளது.
இது குறித்து நல்லி செட்டிபாளையம் மக்கள் கூறுகையில், 'குருக்கிளையம் பாளையத்தில் உள்ள நீர் தேக்க தொட்டியில் நீர் நிரப்பி அருகில் உள்ள நல்லிசெட்டிபாளையம், அச்சம் பாளையம் பகுதியில் பற்றாக்குறை இல்லாமல் குடிநீர் வினியோகம் செய்யலாம்.
15 லட்சம் ரூபாய் செலவு செய்து கட்டப்பட்ட தொட்டி பயன்படுத்தப்படாமல் முடங்கி உள்ளது. இதை பயன்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.
