/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
இரவில் பறந்த 'ட்ரோன்'; மக்கள் போலீசில் புகார்
/
இரவில் பறந்த 'ட்ரோன்'; மக்கள் போலீசில் புகார்
ADDED : பிப் 03, 2025 11:39 PM

நெகமம்; மெட்டுவாவி பகுதியில் இரவு நேரத்தில் 'ட்ரோன்' பறப்பதால், அப்பகுதி மக்கள் போலீசில் புகார் அளித்துள்ளனர்.
நெகமம் அருகே உள்ள, மெட்டுவாவி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில், 'சிப்காட்' தொழில் பூங்கா அமைக்க 'ட்ரோன்' வாயிலாக சர்வே பணிகள் நடந்தது. இதற்கு அப்பகுதி மக்கள், கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த சில தினங்களாக மெட்டுவாவி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் இரவு நேரங்களில், 10க்கும் மேற்பட்ட 'ட்ரோன்'கள் விளைச்சல் நிலங்கள் மேற்பரப்பில் பறக்கின்றன. இதனால் விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர்.
மேலும், இதுகுறித்து விவசாயிகள் ஒன்றிணைந்து நெகமம் போலீஸ் ஸ்டேஷனில், இரவு நேரத்தில் 'ட்ரோன்' பறப்பதை தடை செய்ய வேண்டும். 'ட்ரோன்' இயக்குபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்தனர்.
விவசாயிகள் கூறியதாவது: கிராமப்புறங்களில் 'ட்ரோன்' பறப்பது குறித்து மாவட்ட கலெக்டர் கிரந்திகுமாரிடம் புகார் தெரிவித்தோம். அதற்கு போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளிக்கும்படி அறிவுறுத்தினார். இதைத்தொடர்ந்து நெகமம் போலீஸ் ஸ்டேஷனில் விவசாயிகள் ஒன்றிணைந்து புகார் அளித்துள்ளோம்.
மேலும், அரசு துறைகளில் இருந்து இரவு நேரத்தில் 'ட்ரோன்' பறக்கவிடவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, தன்னிச்சையாக உரிய அனுமதி இன்றி 'ட்ரோன்' பறக்க விடும் நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இரவு நேரத்தில் மெட்டுவாவி பகுதியில் போலீசார் கூடுதல் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும்.
இவ்வாறு, கூறினர்.

