/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அடிப்படை வசதி கோரி கலெக்டரிடம் மக்கள் சரமாரி புகார்; குழாய் பதித்து குளத்தில் கழிவுநீர் விடுகின்றனர்
/
அடிப்படை வசதி கோரி கலெக்டரிடம் மக்கள் சரமாரி புகார்; குழாய் பதித்து குளத்தில் கழிவுநீர் விடுகின்றனர்
அடிப்படை வசதி கோரி கலெக்டரிடம் மக்கள் சரமாரி புகார்; குழாய் பதித்து குளத்தில் கழிவுநீர் விடுகின்றனர்
அடிப்படை வசதி கோரி கலெக்டரிடம் மக்கள் சரமாரி புகார்; குழாய் பதித்து குளத்தில் கழிவுநீர் விடுகின்றனர்
ADDED : டிச 28, 2024 12:25 AM

அன்னுார்; '93 ஏக்கர் பரப்பளவு உள்ள எருக்கலாங் குளத்தில் குழாய் பதித்து கழிவுநீர் கலக்கின்றனர்,' என கலெக்டரிடம் புகார் தெரிவிக்கப்பட்டது.
தமிழக அரசின், 'உங்களைத் தேடி, உங்கள் ஊரில்' என்னும் திட்டத்தில் கோவை கலெக்டர் கிராந்தி குமார் நேற்று முன்தினம் காலை அன்னுார் வந்தார்.
பல்வேறு இடங்களில் ஆய்வு செய்தார். அதன்பின் பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
இதில் கஞ்சப்பள்ளி மற்றும் குன்னத்தூராம் பாளையம் மக்கள் கலெக்டரிடம் கூறுகையில், 'பல ஆண்டுகளுக்குப் பிறகு 93 ஏக்கர் பரப்பளவு உள்ள எருக்கலாங் குளம், அத்திக்கடவு நீர் மற்றும் மழை நீரால் நிரம்பி வழிகிறது.
இதனால் சுற்றுவட்டாரத்தில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆனால் ஒரு தொழிற்சாலையில் இருந்து நிலத்துக்கு அடியில் குழாய் பதித்து கழிவுநீரை குளத்தில் கலக்கின்றனர். இதனால் குளத்து நீர் மாசுபடுகிறது. நிலத்தடி நீரும் மாசுபட்டு வருகிறது.
இதுகுறித்து அதிகாரிகளிடம் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. இதே போல் தொழிற்சாலையில் இருந்து வெளியாகும் செல் பூச்சிகளால் உணவு உண்ண முடிவதில்லை. உணவு பண்டங்களை திறந்து வைக்க முடிவதில்லை. இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். குளத்து நீர் செல்லும் பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்,' என்றனர்.
பேரூராட்சி தலைவர் பரமேஸ்வரன் அளித்த மனுவில், 'பேரூராட்சியில் ஆதிதிராவிடர் காலனியில் அரசால் கட்டித் தரப்பட்ட பல தொகுப்பு வீடுகள் அபாய நிலையில் உள்ளன. அவற்றுக்கு பதில் புதிதாக தொகுப்பு வீடு கட்டி தர வேண்டும். ' என தெரிவிக்கப்பட்டது.
கழிவு நீர்
முகாசி செம்சம்பட்டி பொதுமக்கள் அளித்த மனுவில், 'பொகலூரில் உள்ள அரசு புறம்போக்கு குட்டையில் லோடு கணக்கில் மண் எடுத்து கடத்துகின்றனர்.
குட்டையில் உள்ள பனை மற்றும் இதர மரங்களை அகற்றி விட்டனர். விவசாய பூமிகளுக்கு செல்லும் வண்டிப்பாதையை ஆக்கிரமிப்பு செய்துள்ளனர்.
இதுகுறித்து பொகலூர் கிராம நிர்வாக அலுவலரிடமும் காவல்துறையிடமும் புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை,' என தெரிவிக்கப்பட்டது.
நேற்று காலை அன்னுார் பேரூராட்சி பழைய அலுவலகத்தில் ஆய்வு செய்து, தூய்மை பணியாளர்களிடம் கலெக்டர், 'உங்களுக்கு அரசு நிர்ணயித்த குறைந்தபட்ச சம்பளம் வழங்கப்படுகிறதா, தொழிலாளர் நல வாரியத்தில் உறுப்பினராக சேர்ந்துள்ளீர்களா? என கேட்டார்.
அதற்கு தூய்மை பணியாளர்கள் பதிலளிக்கையில், '15 ஆண்டுகளாக பணிபுரிந்தும் எங்களை நிரந்தரபடுத்தவில்லை,' என புகார் தெரிவித்தனர்.

