/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சாலை சந்திப்பில் வேகத்தடை அமைக்க மக்கள் கோரிக்கை
/
சாலை சந்திப்பில் வேகத்தடை அமைக்க மக்கள் கோரிக்கை
ADDED : அக் 16, 2025 08:39 PM

பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே என்.ஜி.ஜி.ஓ., காலனி பகுதியில், பிரதான வழித்தடத்தில் இணையும் சாலை சந்திப்பில் வேகத்தடை அமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பொள்ளாச்சியில் இருந்து சூளேஸ்வரன்பட்டி, சமத்துார் வழித்தடத்தில், வணிக நிறுவனங்கள், குடியிருப்புகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இவ்வழித்தடத்தில், வாகன போக்குவரத்தும் அதிகமுள்ளது.
இவ்வாறு இருந்தும், இவ்வழித்தடத்தில் இணையும் பல கிராம சாலைகளில் வேகத்தடை அமைக்கப்படாமல் உள்ளது. குறிப்பாக, சூளேஸ்வரன்பட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட என்.ஜி.ஜி.ஓ., காலனி பகுதியில், இணையும் சாலையில் வேகத்தடை அமைக்கப்படவில்லை.
அதிவேகமாக சாலையை கடக்க முற்படும் வாகனங்கள் விபத்தில் சிக்குகின்றன. இது ஒருபுறமிருக்க, அங்கு புதிய டிரான்ஸ்பார்மர் மாற்றி அமைக்கும் பொறுட்டு, சமீபத்தில் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அதில், இணைப்புகள் மாற்றியமைக்கப்பட்ட நிலையில், தெருவிளக்கு எரிவதில்லை என, அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
மக்கள் கூறுகையில், 'குறுகலான வளைவு, எதிரே வரும் வாகனங்கள் தெரியாதது, சாலையின் இருபுறங்களிலும் நிறுத்தப்படும் கனரக வாகனங்களால், சீரான போக்குவரத்து தடைபடுகிறது. குடியிருப்பு பகுதியில் இருந்து வரும் சாலையில், பிரதான சாலை சந்திப்பு பகுதியில் வேகத்தடை கிடையாது.
இரவு நேரத்தில், தெருவிளக்குகள் எரியாததால், பிரதான சாலையை கடக்க பாதசாரிகள் அவதிப்படுகின்றனர். இப்பிரச்னைக்கு தீர்வு காண துறை ரீதியான அதிகாரிகளின் நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.