UPDATED : பிப் 18, 2026 06:55 AM
ADDED : பிப் 18, 2026 06:52 AM

மகளிர் உரிமைத்தொகை பயனாளிகளின் வங்கி கணக்கில் யாரும் எதிர்பாராத விதமாக 5000 ரூபாய் செலுத்தப்பட்டது. எந்த முன்னறிவிப்புமின்றி பணம் வந்ததால், பயனாளிகள் திக்குமுக்காடி போயினர். அப்படி வந்த பணத்தை என்ன செய்தீர்கள் என மக்களிடம் கேட்டோம். அதற்கு அவர்கள் அளித்த பதில்கள் இதோ...!
'பத்திரமாக உள்ளது' பணம் வரவு வைக்கப்பட்டதில் மகிழ்ச்சி தான். அப்படியே வைத்துள்ளேன். ஆனால், விலைவாசி தொடர்ந்து அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது. அதனை கட்டுப்படுத்த அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். விலைவாசி கட்டுக்குள் இருந்தால் மட்டுமே சேமிப்பு அதிகரிக்கும்.
- விஜயா, இடையர்பாளையம்
என் மகளின் கல்லூரி கட்டணத்தை செலுத்த இந்த பணத்தை எடுத்து வைத்து விட்டேன். மூன்று மாதங்களுக்கான தொகையை முன்கூட்டியே வழங்கி விட்டதால், இப்போது மற்ற செலவுகளை நிர்வகிக்க முடிகிறது. பணம் இல்லாத நேரத்தில் பணம் கிடைத்தது மகிழ்ச்சி அளிக்கிறது.
- பத்மா, ரத்தினபுரி
'புது யூனிபார்ம் எடுத்தேன்'
எனக்கு இரண்டு மகள், ஒரு மகன்; இளையவள் அரசு உதவி பெறும் பள்ளியில் படிக்கிறாள். அவளின் யூனிபார்ம் மாற்ற வேண்டுமென, நினைத்து கொண்டே இருந்தேன். திடீரென, 5 ஆயிரம் ரூபாய் வந்ததும், புதியது வாங்கிவிட்டேன். அன்றைய தினம் வீட்டிற்கு, ஸ்வீட், காரம் வாங்கி சென்றேன். என் நிலைக்கு, அத்தொகை மிகப்பெரியது.
- விஜயபாண்டியம்மாள், கெம்பட்டிகாலனி.
'ஸ்கூல் பீஸ்'
பணம் வந்து விட்டது. இன்னும் எடுக்கவில்லை. அடுத்த கல்வியாண்டு பள்ளிக் கட்டணம் செலுத்த உபயோகமாக இருக்கும். கஷ்டப்படுற சமயத்துல தானா உதவி கிடைச்சா எப்படி இருக்குமோ அந்த அளவுக்கு சந்தோஷம். ஆத்திர அவசரத்துக்குனு தனியா பணம் எடுத்து வைக்க முடியாத என்ன மாதிரி ஆளுகளுக்கு இது பெரிய லாட்டரி மாதிரி. உண்மையிலேயே சந்தோஷம்.
--ரம்யா, காரமடை
'கெஸ்ட்டுக்கு விருந்து'
மகளிர் உரிமைத்தொகையாக மாதம் ஒரு முறை 1,000 கொடுக்கறாங்க சரி, ஆனா் திடீருன்னு, 5,000 ரூபா கொடுத்தாங்க. எதிர்பார்க்கல. அதே சமயம் எதிர்பாராம கெஸ்ட் வந்தாங்க. விருந்து வெச்சு செலவு பண்ணிட்டோம். பணம் வந்தது நல்லது தாங்க. ஆனா பணம் கொடுத்தோமுல்ல, ஓட்டு போடுங்கன்னு வீடு வீடா வந்து கட்சிக்காரங்க மிரட்டாமல் இருந்தா சரி. -ஜோதிமது கவுண்டம்பாளையம்.
'வண்டி டியூ கட்டினேன்'
என் மகனுக்கு டூவீலர் லோனில் வாங்கி இருக்கோம். இந்த மாசம் டியூ கட்ட பணம் இல்லயேன்னு கவலையா இருந்துச்சு. இந்த, 5000 ரூபா வந்தவுடனே என்னோட கவலையெல்லாம் பறந்து போயிடுச்சு. இவ்ளோ பணம் வருமுன்னு நா எதிர்பாக்கலிங்க. என்ன போல கஷ்டப்படுற குடும்பத்துக்கு, 5,000 ரூபாங்கிறது பெரிய உதவி. -பச்சையம்மாள் காந்திபுரம்
'மளிகை வாங்கிட்டேன்'
மாசம் பிறந்தா, 1000 ரூபா எப்ப வருமுன்னு, எதிர்பாத்து காத்துட்டு இருப்பேன். இந்த மாசம் 5000 ரூபா வந்துருக்குன்னு, பக்கத்து விட்டு ராஜலட்சுமி சொன்னப்போ நம்பல. பேங்குக்கு போய் பார்த்தா என் அக்கவுன்டுல, 5,000 ரூபா வந்திருந்தது. எனக்கு தல கால் புரியல. உடனே போயி இந்த மாசத்துக்கான மளிகை சாமாங்க எல்லா வாங்கியாந்திட்டேன்..
-- சுலோக்சனா உக்கடம் புல்லுக்காடு
'பள்ளி கட்டணம்'
இரண்டு மகன்களுக்கு பள்ளி இறுதி பருவத்திற்கான கட்டணம் இம்மாதம் செலுத்தவேண்டி இருந்தது. பொதுவாகவே, பருவ கட்டணம் செலுத்தும் மாதங்களில் சற்று பட்ஜெட் இடிக்கும். அந்த சமயத்தில் இப்பணம் வந்தது சற்று மகிழ்ச்சியாக இருந்தது. பள்ளி இறுதி பருவ கட்டணத்தில், 5000 ரூபாய் சேர்த்து கட்டிவிட்டேன்
. - நாகவள்ளி மதுக்கரை
