/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
புதுசு புதுசா தள்ளுவண்டி கடைகள்: நெறிப்படுத்த மக்கள் எதிர்பார்ப்பு
/
புதுசு புதுசா தள்ளுவண்டி கடைகள்: நெறிப்படுத்த மக்கள் எதிர்பார்ப்பு
புதுசு புதுசா தள்ளுவண்டி கடைகள்: நெறிப்படுத்த மக்கள் எதிர்பார்ப்பு
புதுசு புதுசா தள்ளுவண்டி கடைகள்: நெறிப்படுத்த மக்கள் எதிர்பார்ப்பு
ADDED : நவ 14, 2025 09:17 PM
பொள்ளாச்சி: பொள்ளாச்சி நகரில், சமீப காலமாக புதிது புதிதாக தள்ளுவண்டிக் கடைகள் அமைக்கப்படுவதால், அதனை நெறிப்படுத்த வேண்டும் என, மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
பொள்ளாச்சி நகரில், இரவு நேர டிபன் கடைகள், சில்லி சிக்கன் கடைகள், சூப் வியாபாரம் என, தள்ளுவண்டி கடைகள் பெருகி வருகின்றன. குறிப்பாக, மோமோஸ் முதல் பிரியாணி வரை, பணியாரம் முதல் பாஸ்தா வரை சைவ, அசைவ பிரியர்களுக்கு ஏற்ப விதவிதமான உணவு கிடைக்கும் வகையில் தள்ளுவண்டிக் கடைகள் அமைக்கப்படுகின்றன.
இவற்றில் பெரும்பாலானவை, போக்குவரத்து நெரிசல் மிகுந்த ரவுண்டானா, சந்திப்பு ரோட்டை ஒட்டி அமைக்கப்படுகிறது. சாலையோர தள்ளுவண்டிக் கடைகளை நெறிபடுத்த நகராட்சி நிர்வாகம் முனைப்பு காட்ட வேண்டும் என, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தன்னார்வலர்கள் கூறியதாவது:
நகராட்சியில், மத்திய அரசின், தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் சாலையோர வியாபாரிகளுக்கான ஆதரவு திட்டத்தில், சிலர் தள்ளுவண்டிகள் பெற்றுள்ளனர். தவிர, தள்ளுவண்டிக் கடைக்காரர்களின் வாழ்வாதாரம் பாதிக்காத வகையில், மகாலிங்கபுரம் பகுதியில் 'புட் கோர்ட்' அமைக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், கோவை மற்றும் உடுமலை ரோட்டில் சமீபகாலமாக மாலை நேரத்தில் புதிதாக தள்ளுவண்டிக் கடைகள் அமைக்கப்படுகிறது. சிலர், ரோட்டை ஒட்டியே கடைகளை அமைப்பதால் விபத்து அபாயம் அதிகரிக்கிறது.
அத்தகைய கடைகளைக் கண்டறிந்து நெறிப்படுத்த வேண்டும். உணவு தயாரிப்பில் சுகாதாரம் பேணவும், உணவு பாதுகாப்பு விதிப்படி தொப்பி அணிவது, உணவு பரிமாற்றத்தின் போது கையுறை அணிவது போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அறிவுறுத்த வேண்டும்.
இவ்வாறு, கூறினர்.

