/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
குழாய் உடைப்பால் வீணாகும் குடிநீர்: மக்கள் அவதி
/
குழாய் உடைப்பால் வீணாகும் குடிநீர்: மக்கள் அவதி
ADDED : ஜூன் 22, 2025 11:22 PM
சூலுார்: சூலுார் - திருச்சி ரோட்டில் கண்ணம்பாளையம் பேரூராட்சிக்கு உட்பட்ட சிந்தாமணிப்புதூர் முதல் ரங்கநாத புரம் பிரிவு வழியாக, பில்லுர் குடிநீர் சப்ளை செய்யும் பிரதான குழாய் பதிக்கப்பட்டுள்ளது.
30 ஆண்டுகளுக்கு முன் பதிக்கப்பட்ட இந்த குழாய் வழியாக கண்ணம்பாளையம், பள்ளபாளையம் பேரூராட்சிகள், பல ஊராட்சிகளுக்கு குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது.
இந்த குழாய் சில இடங்களில் ரோட்டின் நடுப்பகுதியிலும், சில இடங்களில் ரோட்டின் ஓரத்திலும் செல்கிறது. இந்த குழாயில் பல பகுதிகளில் அடிக்கடி உடைப்பு ஏற்படுவதால், பல ஆயிரம் லிட்டர் குடிநீர் வீணாகி ரோட்டில் ஓடுகிறது.
பழைய குழாயை அகற்றி விட்டு, ரோட்டின் ஓரத்தில் புதிய குழாய் பதிக்க வேண்டும், என, பல ஆண்டுகளாக மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால், குடிநீர் வடிகால் வாரியம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால், அதிருப்தி அடைந்துள்ள மக்கள், போராட்டத்தில் குதிக்க முடிவு செய்துள்ளனர்.
இதுகுறித்து ரங்கநாத புரதத்தை சேர்ந்த நந்தகோபால் கூறியதாவது:
திருச்சி ரோட்டில் உள்ள பில்லுார் குடிநீர் குழாய், மாதத்துக்கு மூன்று இடத்தில் உடைந்து, குடிநீர் வீணாவது வழக்கமாகி உள்ளது. அவற்றை அடைக்கவே, குடிநீர் வடிகால் வாரியத்தினர், 30 ஆண்டுகளில் லட்சக்கணக்கான ரூபாயை செலவு செய்துள்ளனர்.
குழாய் உடைப்பால் பல பகுதிகளில் குடிநீர் சப்ளை பாதிக்கப்படுவதால், மக்கள் அவதிக்குள்ளாகின்றனர். பிரதான குழாயை மாற்றி, புதுக்குழாய் அமைக்காவிட்டால், பிரச்னை தீராது. வாரியம் குழாய் மாற்ற நடவடிக்கை எடுக்காவிட்டால், மக்களை திரட்டி போராட்டத்தில் ஈடுபட திட்டமிட்டுள்ளோம்.
இவ்வாறு, அவர் கூறினார்.