/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மழையால் சாலையில் பள்ளம் மூடப்படாததால் மக்கள் அவதி
/
மழையால் சாலையில் பள்ளம் மூடப்படாததால் மக்கள் அவதி
ADDED : அக் 23, 2024 10:10 PM

பொள்ளாச்சி: பொள்ளாச்சி நகரில், பாரதி வீதி, எல்.ஐ.சி., காலனி சந்திப்பில், சாலையின் நடுவே திடீர் பள்ளம் ஏற்பட்டும், சீரமைக்கப்படாமல் உள்ளது.
பொள்ளாச்சி நகரில், கடந்த வாரம் கனமழை பெய்தது. சாலையில் வெள்ளம் வழிந்தோடியதால், வாகன ஓட்டுநர்கள் திணறினர். அதேநேரம், பல பகுதிகளில் முறையான வடிகால் வசதி இல்லாததால், சாலையில் தண்ணீர் தேங்கியது.
மழையின் வேகத்துக்கு தாக்குப்பிடிக்காமல், ஆங்காங்கே சாலையின் நடுவே மண் அரிப்பு காரணமாக,பெரும் பள்ளங்கள்ஏற்பட்டுள்ளன. குறிப்பாக, பாரதி வீதி, எல்.ஐ.சி., காலனி சந்திப்பில், சாலையின் நடுவே பள்ளம் ஏற்பட்டது.
சாலை சந்திப்பிலேயே பள்ளம் ஏற்பட்டதால், அதற்கான எச்சரிக்கை அறிவிப்பு பலகைகள் வைக்கப்படாததால், இரு சக்கர வாகன ஓட்டுநர்கள், விபத்தில் காயமடைந்தனர். இது குறித்து, வணிக நிறுவனத்தினர், ஆட்டோ ஓட்டுநர்கள், நகராட்சி நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தும், சீரமைப்பு பணி மேற்கொள்ளப்படவில்லை.
இதனால், வாகன ஓட்டுநர்களை 'அலர்ட்' செய்யும் வகையில் பெரிய அளவிலான கல் மற்றும் செடிகள் வைத்து, பள்ளம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. இந்நிலையில், தினமும் மழை பெய்வதால், வாகன ஓட்டுநர்கள் அச்சத்துடன் பயணிக்கின்றனர்.
மக்கள் கூறுகையில், 'பள்ளம் ஏற்பட்டு ஒரு வாரமாகியும், தற்போது வரை சீரமைப்பு பணி மேற்கொள்ளவில்லை. பிரதான சாலையாக இருப்பதால், இவ்வழியே அதிகப்படியான வாகனங்கள் இயக்கப்படுகின்றன.
பள்ளம் காரணமாக, இலகுரக வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பள்ளத்தை சீரமைக்க நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றனர்.