/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
குப்பை கிடங்கில் தீ புகையால் மக்கள் அவதி
/
குப்பை கிடங்கில் தீ புகையால் மக்கள் அவதி
ADDED : ஜன 18, 2024 12:46 AM

கிணத்துக்கடவு : கிணத்துக்கடவு பேரூராட்சிக்கு உட்பட்ட குப்பை கிடங்கில் தீ பிடித்ததால், அருகில் உள்ள குடியிருப்பு பகுதியினர் அவதிப்படுகின்றனர்.
கிணத்துக்கடவு பேரூராட்சிக்கு உட்பட்ட, 1வது வார்டில் 500க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். பேரூராட்சி பகுதியில் சேகரிக்கப்படும் குப்பையில் பெரும் அளவு இங்கு கொட்டப்படுகிறது. இந்த குப்பை கிடங்கு பேரூராட்சி எல்லை பகுதியில் உள்ளது.
இங்கு கடந்த மூன்று நாட்களுக்கு முன் திடீரென தீப்பிடித்தது. இதை தொடர்ந்து அருகில் இருக்கும் குடியிருப்புவாசிகள் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர், தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதையடுத்து, தீ எரிவது நின்று புகை மட்டும் வெளிவர தொடங்கியது.
குப்பை கிடங்கில் இருந்து வரும் புகை, அங்குள்ள குடியிருப்பு பகுதி முழுவதும் சூழ்ந்ததால், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சிரமத்திற்கு உள்ளாயினர். மேலும், இந்த தீ தொடர்ந்து அணையாமல் புகைந்து கொண்டே இருப்பதால், தீயணைப்பு துறையினர் முயற்சியை விடாமல் தொடர்ந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.