ADDED : பிப் 20, 2024 10:43 PM
கிணத்துக்கடவு:கிணத்துக்கடவு, பட்டணம் கிராமத்தில் கடந்த சில நாட்களாக கொசு தொல்லை அதிகரித்துள்ளதால், பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.
கிணத்துக்கடவு, நல்லட்டிபாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட பட்டணம் கிராமத்தில் ஐந்நுாற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசிக்கின்றனர். இப்பகுதியில் கடந்த சில நாட்களாக கொசு தொல்லை அதிகரித்து வருவதால் மக்கள் அவதிப்படுகின்றனர்.
இப்பகுதியில், மாலை நேரத்தில் கொசு தொல்லை அதிகமாக இருப்பதால், குடியிருப்புகளில் இருப்பவர்கள் தங்கள் குழந்தைகளை வெளியில் அனுப்ப அச்சப்படுகின்றனர். மேலும், இப்பகுதியில் கொசு மருந்து அடித்து ஒரு மாத காலம் ஆகிவிட்டது.
டெங்கு கொசுவால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஊராட்சி நிர்வாகத்தினர் விழிப்புணர்வு ஏற்படுத்துகின்றனர். ஆனால், கிராமத்தில் கொசு ஒழிப்பு பணிகள் எதுவும் மேற்கொள்ளாததால், மக்கள் அவதிப்படுகின்றனர்.
கடந்த முறை சுகாதார துறையால் அடிக்கப்பட்ட கொசு மருந்து, டீசல் செலவுக்கு ஊராட்சி நிர்வாகத்தினர் இன்னும் பணம் செலுத்தவில்லை என, புகார் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து, ஊராட்சி நிர்வாகத்தினர் கூறுகையில், 'ஊராட்சியில் கொசு மருந்து அடிக்க போதிய நிதி இல்லை. தற்போது ஊராட்சியில் உள்ள மக்களிடம் வரி வசூலிக்கப்பட்டு வருகிறது. இன்னும் ஒரு வாரத்தில், கிராமத்தில் கொசு மருந்து அடிக்கப்படும்,' என்றனர்.

